2010 ம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து விவிஜபிகளுக்காக 12 சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

ரூ. 3,600 கோடிக்கு செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் சுமார் ரூ. 400 கோடி இந்தியாவில் உள்ள முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் உறவினர் விமானப்படை தலைமை தளபதி எஸ்.பி. தியாகி உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

ஊழல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி 2013 ம் ஆண்டு அறிவித்தார், இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக இடைத்தரகராக செயல்பட்ட சுஷேன் குப்தா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்த அமலாக்கத் துறையினர், ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள SG என்பதற்கும் சோனியா காந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

ஹெலிகாப்டர் பேர ஊழலில் 2016 ம் ஆண்டு சோனியா காதியின் பெயர் அடிபட்ட போது, தான் எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாகவும் தன் மீதான இந்த குற்றச்சாட்டு பொய்யானது இதுகுறித்து மத்திய அரசு விசாரித்து உண்மையை அறிவிக்கவேண்டும் என்றும் அப்போது கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அமலாக்கத்துறையின் இந்த அறிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள SG என்பது சுஷேன் குப்தாவை குறிப்பதாகவே உள்ளது என்பது அவரது பல்வேறு வங்கிக்கணக்குகளில் நடந்த பரிவர்த்தனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.