டில்லி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மெக் டொனால்ட் மற்றும் டோமினோ பிட்சா நிறுவனம் தொடர்பில்லா விநியோகத்தை அறிமுகம் செய்துள்ளன.
தற்போது இந்தியாவில் வீட்டில் இருந்து ஆர்டர் செய்து உணவைச் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. புகழ்பெற்ற பிட்சா நிறுவனமான டோமினோ இவ்வாறு வீட்டுக்கு விநியோகம் செய்வதில் முன்னோடியாக உள்ளது. இந்த நிறுவனத்துக்கு நாடெங்கும் 1325 உணவகங்கள் உள்ளன.
நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக வாடிக்கையாளர்கள் உணவக உணவு உண்ண மிகவும் பயப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வீடுகளுக்கு விநியோகம் செய்யும் ஊழியர்கள் மூலம் கொரோனா தொற்ற வாய்ப்புள்ளதால் முகக் கவசம் கையுறை அணியாமல் விநியோகம் செய்யப்படும் உணவுகளைத் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
எனவே டொமினோ நிறுவனம் தனது பிட்சாவை வீடுகளுக்குத் தொடர்பற்ற விநியோகம் மூலம் அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விநியோகத்தைப் பெற வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் தற்போதைய டொமினோ செயலியை வைத்திருக்க வேண்டும். அதில் தொடர்பற்ற விநியோகம் என்பதை ஆர்டர் செய்யும் போது தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு ஆர்டர் செய்யும் உணவு வகைகள் வாடிக்கையாளர்கள் வீட்டு வாசலில் ஒரு கேரி பேக்கில் போட்டு வைத்து விட்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து தள்ளி நிற்பார்கள். இந்த வகை விநியோகத்துக்கு ஆன்லைன் மூலம் ஆர்டர் அளிக்கும் போதே பணம் செலுத்த வேண்டும். ஊழியர்கள் அந்த உணவு வகைகளை வாடிக்கையாளர்கள் எடுத்துக் கொள்வது வரை காத்திருப்பார்கள்.
இதைப்போலவே மெக் டொனால்ட் நிறுவனமும் தொடர்பற்ற விநியோகத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் மேலும் ஒரு படி போய் விநியோக ஊழியர்கள் வீட்டு வாசலில் உணவை வைத்ததும் அங்கிருந்து நகர்ந்து தொலைப்பேசி மூலம் விவரம் தெரிவிப்பார்கள். அதன் பிறகு வாடிக்கையாளர்கள் விநியோக ஊழியரை பார்க்காமலே உணவை எடுத்துக்கொள்ளலாம்.
அத்துடன் உணவு தயாரிப்போர் மற்றும் பேக் செய்வோர் யாருமே இந்த உணவு வகைகளை கையால் தொடாமல் தானியங்கி முறையில் பேக் செய்யப்படுகிறது. இது பேக் செய்யப்பட்டதும் சீல் இடப்பட்டு கன்வேயர் மூலம் வெளியே வந்து அங்கு வைக்கப்பட்டுள்ள கேரி பேக்கில் தானாகவே விழுந்து விடும். அதன் பிறகு அதை விநியோக ஊழியர் எடுத்துச் செல்வார்.