டில்லி
குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றால் சர்வதேச அளவில் இந்தியா தனிமைப் படுத்தப்படும் என முன்னாள் வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு அறிவித்துள்ள குடியுரிமை சட்டம் 2019 மற்றும் தேசிய குடியுரிமை பதிவேட்டுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. நாட்டின் பல இடங்களில் நடைபெறும் போராட்டங்களால் வன்முறை வெடித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுக்கு வரும் தங்கள் நாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனன் டில்லியில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டார். அந்த கூட்டத்தில் சிவசங்கர் மேனன், “காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து அங்கு அமைதியின்மை நிலவுகிறது. அதன் பிறகு வெளியுறவுத் துராஇ அமைச்சர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பை ரத்து செய்தார்.
தற்போது இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டம் 2019 மற்றும் அடுத்து வர உள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து நமது அண்டை நாடான வங்கதேசத்தின் வெளியுறவு அமைச்சர் இந்தியர்கள் இந்த விவகாரத்தில் ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக் கொள்ளட்டும் எனக் கூறி உள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் நமக்கு ஆதரவுக் கருத்தை சில நாடுகள் தெரிவித்திருந்தன. ஆனால் தற்போது இந்த விவகாரத்தில் பல நாடுகள் கருத்துச் சொல்ல மறுத்துள்ளன. எனவே இதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியா தனிமைப்படுத்தப்படும்” என உரையாற்றி உள்ளார்,