செயற்கை நுண்ணறிவு (AI) வேகமாக வளர்ந்து வரும் உலகத்தில், பெற்றோர் சொல்வது போல பாரம்பரிய வேலை வழிகாட்டல் ஆலோசனையை கண்மூடித்தனமாக பின்பற்றுவது தவறாக இருக்கலாம் என்று OpenAI நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஐஐடி – டெல்லி மாணவர்களுடன் நடந்த நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

“இளைஞர்கள் செய்யும் பெரிய தவறு என்னவென்றால், பெரியவர்கள் சொல்வதை மட்டும் கேட்டு முடிவு செய்வது. உங்கள் சொந்த எண்ணமும் உணர்வும் முக்கியம். பழைய career ஆலோசனைகள் இனி அதே அளவுக்கு வேலை செய்யாமல் போகலாம்,” என்று அவர் கூறிய போது அரங்கில் இருந்த மாணவர்கள் சிரித்தனர்.

அதே நேரத்தில், AI காரணமாக சில வேலைகள் முற்றிலும் மறைந்து போகும் என்றும் அவர் எச்சரித்தார்.

வாழ்க்கை மதிப்புகள் குறித்து பெற்றோர் முக்கியமான வழிகாட்டிகள் தான்; ஆனால் வேகமாக மாறும் காலத்தில் வேலைத் தேர்வு குறித்து அவர்கள் எப்போதும் சரியாக கணிக்க முடியாது என்றும் அவர் விளக்கினார்.

மேலும், எதிர்காலத்தை பற்றி முழுமையாக யாரையும் நம்ப வேண்டாம் என்றும், இளைஞர்களே புதிய மாற்றங்களை விரைவாக புரிந்து கொள்வார்கள் என்றும் ஆல்ட்மேன் கூறினார்.

தன்னம்பிக்கையும், தானாக முடிவு எடுக்கும் திறனும் இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தினார். “இந்த திறனை கற்றுக் கொள்ளலாம். உலகம் பல நேரங்களில் நம்மை தளரச் செய்யும். அதற்கு எதிராக நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்,” என்றார்.

இப்போது AI கருவிகள் வந்ததால், ஒரு பெரிய குழு செய்த வேலையே ஒரே ஒருவர் செய்ய முடியும். ஒரு நல்ல யோசனை, முயற்சி மற்றும் மனவலிமை இருந்தால் பெரிய சாதனைகள் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

OpenAI தொடங்கிய ஆரம்ப காலத்தில் பலர் அந்த யோசனை சாத்தியமில்லை என்று நினைத்ததாகவும், ஆனால் ஒரு யோசனையில் நம்பிக்கை வைத்து நீண்ட காலம் முயன்றால் பெரிய வெற்றி பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

மாணவர்கள் ஆபத்தை ஏற்கவும், தோல்வியைக் கண்டு பயப்படாமல் தொடர்ந்து முயற்சி செய்யவும் வேண்டும் என்று ஆல்ட்மேன் அறிவுறுத்தினார்.

“இந்த ஆண்டில் ஒவ்வொரு IIT மாணவரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு திறன் என்ன?” என்று மாணவர் ஒருவர் கேட்கப்பட்ட போது அவர் சுருக்கமாக “Resilience” (சிரமங்களை தாண்டி மீண்டு நிற்கும் திறன்) என்று பதிலளித்தார்.

AI காரணமாக வேலைகள் குறையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சில வேலைகள் மறைந்து போகும் என்பது உண்மை தான் என்றார். ஆனால் அதே நேரத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும், எதிர்காலத்தில் இப்போது இல்லாத வேலைகளையே பலர் செய்வார்கள் என்றும் கூறினார்.

[youtube-feed feed=1]