டில்லி:
நாட்டில் பிச்சைக்கார்கள் அதிகமுள்ள மாநிலமாக மேற்கு வங்காளம் இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில், 6800 பிச்சைக்காரர்கள் இருப்பதாகவும், இந்த பட்டியலில் 33வது இடத்தில் தமிழகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்களவை உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்து மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர்சந்த் கெலோட் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களில், நாடு முழுவதும் சுமார் 4.13 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளதாகவும், இதில் 2.21 லட்சம் ஆண்களும், 1.91 லட்சம் பெண்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் மேற்கு வங்காளம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு 81 ஆயிரத்து 244 பேர் பிச்சைக்காரர்கள் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறி உள்ளது.
அதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தை யோசி தலைமையிலான உ.பி. பிடித்துள்ளது. அங்கு 66 ஆயிரம் பிச்சைக்காரர்கள் இருப்பதாகவும், மூன்றாவது இடத்தில் உள்ள பீகாரில் 30 ஆயிரம் பிச்சைக்கார்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் தமிழகம் 33வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 6800 பிச்சைக்காரர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூரிலும், கிழக்கு மாநிலமான மேற்கு வங்காளத்திலும் பெண் பிச்சைக்காரர்கள் அதிகளவில் உள்ளனர்.
யூனியன் பிரதேசங்களில் தலைநகர் டெல்லியில் அதிகமாக 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உள்ளனர்.
மேலும், டாமன் – டையூவில் 22 பேரும், லட்சத்தீவில் 2 பிச்சைக்காரர்கள் மட்டுமே இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.