சென்னை: தற்காலிக பணியாளர்களை நியமித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டாதீர்கள் என ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை  அறிவுரை கூறியுள்ளது.  நிரந்தர பணியிடங்களில் குறைந்த சம்பளத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாளர்களை நியமித்து தொழிலாளர்களை சுரண்டும் போக்கை தடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் உள்பட பல்வேறு பணிகளுக்கு தற்காலிக பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில், இதுபோன்ற நடவடிக்கை அனைத்து துறைகளிலுமே காணப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இப்போதுவரை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி ஆசிரியர்கள், துப்புரவு பணியாளர்கள் என பலர் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு குறித்த நேரத்தில் சம்பளம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த  2006 ம் ஆண்டு தினக்கூலி அடிப்படையில் மதுரை மாநகராட்சியில்  தூய்மைப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களில்  389 பேர் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி 2010ஆம் ஆண்டு தொழிலாளர் ஆய்வாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அவர்களை நிரந்தரம் செய்ய. தொழிலாளர் ஆய்வாளர் உத்தரவிட்டார். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் அதை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடித்து ஒப்பந்த அடிப்படையிலேயே தற்காலிக பணியாளர்களை நியமித்து வருகின்றனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர்கள்,  உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யதனர்.. இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, மாநகராட்சி மனுக்களை தள்ளுபடி செய்தும், தூய்மை பணியாளர்களின் மனுக்களை ஏற்று அவர்களை பணி நிரந்தரம் செய்யவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாநகராட்சி ஆணையர் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்தார். இதனை நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், “மத்திய, மாநில அரசுகள் தங்களை மக்கள் நல அரசுகள் என சொல்லி வருகின்றன. ஆனால் அதற்கு மாறாக அரசு துறைகள், மாநகராட்சிகளில் நிரந்தர பணியாளர்கள் பார்க்கும் பணிகளில்  தற்காலிக பணியாளர்களை நியமித்து தொழிலாளர்கள் விரோத நடவடிக்கை மேற்கொள்கின்றன. பெரும்பாலான நேரங்களில் தற்காலிக நியமனங்கள் பணி விதிகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் பொது வேலை வாய்ப்பில் சம வாய்ப்பு மறுக்கப்படு கிறது.

நிரந்தர பணியிடங்களில் குறைந்த சம்பளத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாளர்களை நியமித்து தொழிலாளர்களை சுரண்டும் போக்கை தடுக்க வேண்டும். பணி நியமனங்களுக்கு தனி விதிகள் உள்ளன. இருப்பினும் உத்தரவுகள் பிறப்பித்த இதுபோன்ற பின்வாசல் நியமனங்களும் நடைபெறுகின்றன.

எதிர்காலத்தில் நிரந்தர பணியாளர்களை மேற்கொள்ளும் பணியிடங்களில் குறைந்த ஊதியத்துக்காக தற்காலிக அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கும் போக்கை அரசு நிறுத்தும் என நம்புகிறோம் என குறிப்பிட்டு தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்த தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளனர்.