சென்னை: இபிஎஸ் கோரிக்கையை நிராகரிக்க கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ள ஓபிஎஸ் கடிதம், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் கடிதம் எழுதி உள்ளார்.

கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஓபிஎஸ்-ன் பதவிகள் பறிக்கப்பட்டதுடன், திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக நியமனம் செய்தார். இதையடுத்து, அதிமுகவின் வங்கி கணக்கு களை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் என கடிதமும் கொடுத்தார். இதை வங்கிகள் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், ஓபிஎஸ் அதிமுக பொருளாளர் நான்தான் என்று கூறி, எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால், அதை வங்கி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளார். அதில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. எனவே, அதிமுகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும்  என கோரிக்கை வைத்துள்ளார்.

அதுபோல, அதிமுக எம்.பி. ரவிந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதால், அவரை   அதிமுக எம்பியாக கருதக்கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்  எழுதியிருந்தார்.

இதையடுத்து ஓபிஎஸ் சார்பில் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதில்,  இபிஎஸ் கோரிக்கையை நிராகரிக்கும்படி வலியுறுத்தி உள்ளார்.