சென்னை: 30 நாளில் 2.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என திமுகவினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் உழைக்கும் ஒவ்வொரு திமுக தொண்டர்களுக்கும் என் தலை தாழ்ந்த வணக்கம், நன்றி. எண்ணிக்கைக்குக் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவம், ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது கலந்துரையாடுவதை உறுதி செய்ய வேண்டும். மொத்தமுள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து 2.5 கோடி பேரை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற எடப்பாடி தலைமையிலான அணி மற்றும் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அணி, திமுக அணிக்கு போட்டியாக வரும என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் திமுக தலைமை தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதை சமீபத்தில் தொடங்கியும் வைத்தார். அதன்படி, தொகுதியில் ஒரு வாக்குச்சாவடிக்கு 30 சதவீதம் வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக மாற்றும் பணி திமுக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, 68 ஆயிரம் டிஜிட்டல் ஏஜென்ட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதைக்கொண்டு, திமுகவினர் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர். தற்போது வரை 1.35 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பை தீவிரப்படுத்தும் வகையில், மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்கவும், திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, தமிழக மக்களை ஓரணியில் கொண்டுவர வீடுவீடாகப் பரப்புரை மேற்கொள்ளவும், திமுகவில் அவர்களை உறுப்பினர்களாக்கவும், ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பை கடந்த 3-ம் தேதி தொடங்கினோம்.
செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் வரவேற்பு நன்றாக உள்ளது என கேள்விப்படும்போது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பில் உழைக்கும் ஒவ்வொரு திமுக உடன்பிறப்புக்கும் என் தலைதாழ்ந்த வணக்கம். நன்றி. நமக்கு இன்னமும் 30 நாட்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது நம் கழகத்தினர் கலந்துரையாடுவதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.
மத்திய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கிக் கொண்டிருக்கும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள், தமிழகத்துக்கு இழைத்துள்ள, இழைக்கவுள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்துச் சொல்வதுதான் இந்த முன்னெடுப்பின் நோக்கம். அடுத்த 30 நாட்களில் தமிழகத்தில் மொத்தமுள்ள 68 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் சேர்த்து 2.5 கோடி பேரை திமுக உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும்.
நாம் உருவாக்கியிருக்கும் பூத் டிஜிட்டல் ஏஜென்ட்கள் கழகத்துக்கு மிகப்பெரிய சொத்து. அவர்களை எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், தேர்தலைக் கடந்தும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுவரை இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன. எந்தெந்த வாக்குச்சாவடிகளில் நாம் வழங்கிய நடைமுறையை சரியாகக் கடைபிடிக்கவில்லையோ அங்கெல்லாம் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவோம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.