சென்னை: தன் வயிற்றுப் பிழைப்புக்காக திமுகவைத் திட்டுவதை இனியாவது பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கோட்டைக்குள் இனிமேல் அதிமுகவை மக்கள் நுழைய விட மாட்டார்கள் என திமுகவை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், பொருளாளருமா  டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மத்திய பாஜக அரசை நோக்கி ஒரு வார்த்தைகூட இதுவரை பேச வாய் இல்லாத-முதுகெலும்பு இல்லாத பழனிசாமி, கோட்டை பற்றி இனி கனவுகூட காணவேண்டாம் எனவும் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சொந்தக் கட்சிக்குள்ளேயே தனக்கு ஆதரவு தேடி ஊர் ஊராக அலையும் பழனிசாமி, முதல்வராக இருந்த போது கொள்ளையடித்த பணத்தில் கூட்டத்தைத் திரட்டி வைத்துக் கொண்டு, “இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, அதிமுக வெற்றி பெறுவதற்கான அச்சாரம் போடப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது” என்று வசனம் பேசியிருக்கிறார் என குறிப்பிட்டுள்ள அவர், தங்களுடைய கட்சியின் தலைமை அலுவலகத்தின் வாசலிலேயே பழனிசாமி கோஷ்டியும் பன்னீர்செல்வம் கோஷ்டியும் ரணகளமாக்கி, ரத்தம் சொட்டச் சொட்ட, ‘ரத்தத்தின் ரத்தங்கள்’ நாங்கள் என்று ஊரறிய-உலகமறிய சம்பவம் நிகழ்த்தினார்கள்.

அதன்பிறகு, இடைக்காலத் தலைமைப் பொறுப்பை ஏற்ற பழனிசாமி, தன் திடீர் அதிகாரத்தால் பன்னீர்செல்வத்தை நீக்கினார். தலைமை அலுவலகத்தில் இருந்த பன்னீர்செல்வம் பழனிசாமியை நீக்கினார். கட்சி அதிகாரத்திற்கான அவர்களின் இந்தத் தெருச்சண்டையை மறைக்க, திமுக மீது பாய்கிறார் பழனிசாமி என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னுடைய சொந்த மாவட்டமான சேலத்திற்குச் சென்றுவிட்டு, சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்றும், சட்டமன்றத்தில் அந்த மாவட்டத்தில் வென்றதுபோல மற்ற மாவட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தால் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்திருக்கும் என்று பேசியிருக்கிறார் என தெரிவித்துள்ள அவர், கொள்ளையடித்த பணத்தைச்செலவு செய்து பெற்ற சொற்ப-அற்ப வெற்றியைக் காட்டி உண்மையை மறைக்க நினைக்கும் பழனிசாமிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

 அண்மையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதே சேலம் மாவட்டத்தில் அதிமுக மண்ணைக் கவ்வியிருப்பதையும் மக்களின் பேராதரவுடன் சேலம் மாவட்டம் திமுக கோட்டையாகத் திகழ்வதையும் மறந்துவிட வேண்டாம். எப்படி மறக்க முடியும்? எடப்பாடி நகராட்சி உள்பட பெரும்பான்மையான இடங்களில் திமுகவும் தோழமைக் கட்சிகளும் அமோக வெற்றி பெற்றிருப்பதைப் பழனிசாமியால் தூக்கத்திலும் மறக்க முடியாது. சேலம் மட்டுமல்ல, தமிழ்நாடே இப்போதும் இனி எப்போதும் திமுக கோட்டைதான். அன்பு எனும் கோட்டை கட்டி மக்களின் இதய சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறார் முதல்வர்.

தமிழ்நாடு முதல்வர் இந்திய அளவில் திறமைமிக்க, பெருமைமிக்க முதல்வராக இருக்கிறார் என கூறியுள்ள அவர், இதனைப் பொறுக்க முடியாமல், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைத்தான் திமுக திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது என்று வாய்ச்சவடால் அடிக்கும் பழனிசாமி என்ன நிர்வாகத்தை நடத்தினார் என்றே தெரியவில்லை.

முந்தைய ஆட்சிக்காலத்தில் முடிக்காமல் கிடப்பில் போட்ட திட்டங்களை நிறைவேற்றி, மக்களுக்குப் பலன் தரச் செய்வதுதான் திமுக ஆட்சி. உங்களைப் போல மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை முடக்கிப் போடும் ஆட்சியல்ல. உலகப் புகழ் பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அண்ணாவின் பெயரைக் கட்சியின் லேபிளாக வைத்துக்கொண்டு சிதைக்கின்ற ஆட்சியல்ல எங்கள் திமுக ஆட்சி.

மேலும், திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கோயம்பேடு பேருந்து நிலையத்தையும், சர்வதேச தரத்திலான சென்னை மெட்ரோ ரயில் சேவையையும் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தொடங்கி வைத்தாரே அப்போது இந்தப் பழனிசாமி எங்கே போயிருந்தார்? எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், திமுக ஆட்சியின் திட்டங்களைச் சிதைத்து – முடக்குவது, அல்லது முழுமையடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து வெட்கமே இல்லாமல் தங்கள் பெயரை வைத்துக் கொள்வது இதுதானே அதிமுக ஆட்சிக்காலத்தின் வாடிக்கையாக இருந்தது என சாடியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் கோட்டைக்குள் நுழைந்து ரெய்டு நடத்தினார்கள். டிஜிபி. அலுவலகத்தில் சோதனை நடந்தது. ஒவ்வொரு அமைச்சர் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனைகளை நடத்திய மத்திய பாஜக அரசை நோக்கி ஒரு வார்த்தைகூட இதுவரை பேச வாய் இல்லாத-முதுகெலும்பு இல்லாத பழனிசாமி, தன் வயிற்றுப் பிழைப்புக்காக திமுகவைத் திட்டுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். கோட்டை பற்றி இனி கனவுகூட காணவேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் இனிமேல் கோட்டைக்குள் உங்களை ஒருபோதும் நுழைய விடமாட்டார்கள் என தெரிவித்துள்ள அவர், தன்னுடைய ஆட்சிக்காலத்தில் சொந்த பந்தங்கள்-ரத்த உறவுகளுக்கு ஒட்டுமொத்தமாக காண்ட்ராக்ட் கொடுத்து கமிஷன் ராஜ்ஜியம் நடத்திய பழனிசாமியை சார்ந்தவர்கள் மீது மத்திய அரசின் துறைகள் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அண்மையில் சோதனைக்குள்ளான கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ரூ.500 கோடி சொத்துகளுக்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதுபற்றி இதுவரை வாய் திறக்காதவர் பழனிசாமி.

இவ்வாறு டி.ஆர்.பாலு காட்டமான விமர்சித்துள்ளார்.