வேலூர்: திமுக பொதுச்செயலாளர் துரைமுரகன் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காட்பாடி சட்டமன்ற எம்எல்ஏவும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (ஜன. 16) காலை 6.00 மணி அளவில் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வாயுத்தொல்லை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.
ஆனால், மூச்சுவிட சிரமப்பட்டதால் அவர் சிஎம்சியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு எக்கோ(ECHO) பரிசோதனை உள்பட சர்க்கரை, ரத்த அழுத்தம், ஈசிஜி மற்றும் ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் துரைமுருகன் உடன் அவரது மகனும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர்ஆனந்த் உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
துரைமுருகன், ஏறக்னவே கடந்த டிசம்பர் 17ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேலூர் மாவட்டம் திரும்பும் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதில் அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஜனவரி 4ஆம் தேதி வேலூரில் இருந்து சென்னை செல்லும் வழியில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ராணிப்பேட்டை மாவட்டம் மேல் விஷாரத்தில் உள்ள கேஎச் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது சிஎம்சியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து துரைமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவது கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.