சென்னை: திமுகவினர் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள். அவர்களை நம்பாதீர்கள்  என புதுச்சேரி உப்பளம் பகுதியில்  நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சி  தலைவர் விஜய்  கூறினார். மேலும், புதுச்சேரி அரசாங்கம்  திமுக அரசாங்கத்தை போன்றது கிடையாது,  பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்கிறது என்றவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க மத்தியஅரசு மறுத்து வருகிறது என்றும் கடுமையாக சாடினார்.

புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது.  ‘ஏற்கனவே ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், அதற்கு  புதுச்சேரி அரசு அனுமதி மறுத்ததுடன்,  பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம் எனக் கூறியது. அதன்படி பல்வேறு  கட்டுப்பாடுகளுடன்  உப்பள ம் பகுதியை கொடுத்துள்ளது.

அதன்படி இன்று காலை பொதுக்கூட்டம் நடைபெற்றது.  தவெக பொதுக் கூட்டத்துக்காக இன்று காலை முதல் தொண்டர்கள் குவிந்திருந்தனர். அரசு கியூஆர் கோடு பாஸ் மூலம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், பாஸ்  இல்லாதவர்களும் பொதுக் கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியும் கலைந்து செல்லாமல் விஜய்யை பார்ப்பதற்காக நின்றிருந்தனர்.

இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீஸாரை தள்ளி அவர்கள் கூட்ட வளாகத்துக்கள் நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீஸார் தடியை சுழற்றி தரையில் அடித்தும், சிலரை லேசாக அடித்தும் கலைந்து போக செய்தனர். இதையறிந்த பொதுச் செயலாளர் ஆனந்த், “யாரும் காவல் துறையினருக்கு சிரமம் தர வேண்டாம். பாஸ் உள்ளவர்கள் முதலில் வாருங்கள். அதன்பின் வரிசையாக தொண்டர்கள் வந்தால் பொதுக் கூட்டத்துக்கு அனுமதிப்போம் என்றதுடன்,  காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம்” என மைக்கில் பேசி தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.

இதன்பிறகு நிகழ்ச்சிக்கு விஜய் குறிப்பிட்ட நேரத்தில் வருகை தந்தார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசியவர், “என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மக்களுக்கு வணக்கம். இந்த ஒன்றிய அரசுக்குத்தான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம், புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம். ஆனால் நாம் வேறு வேறு கிடையாது. நாம் ஒன்றுதான். எல்லோரும் சொந்தம்தான்,” என்று கூறி தனது பேச்சைத் தொடங்கினார்.

மேலும், புதுச்சேரி மக்கள் 30 ஆண்டுகளாகத் தன்னைத் தாங்கிப் பிடிப்பதாகவும், தமிழகத்தைப் போலவே புதுச்சேரிக்கும் நிச்சயம் குரல் கொடுப்பேன் என்றும் உறுதி யளித்தார்.மேலும், கூட்டணியில் இருந்தபோதும் புதுச்சேரி அரசை ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை என்றும், மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் அனுப்பியும் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

“புதுச்சேரி மக்களுக்கு ஒன்று மட்டும் சொல்லி கொள்கிறேன். திமுகவை நம்பாதீர்கள்; அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள்”  காட்டமாக விமர்சித்தார்.

மத்தியஅரசு தான் தமிழகத்தை ஒரு மாநிலமாகவும், புதுச்சேரியை யூனியன் பிரதேசமாகவும் பார்க்கிறது. ஆனால் நாம் வேறு வேறு கிடையாது. எந்த மாநிலமாக இருந்தாலும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் நம் உறவுதான்.  1977-ல் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பாகவே, எம்ஜிஆர் 1974ல் புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தார். எம்ஜிஆர் நமக்கானவர், அவரை மிஸ் பண்ணிடாதீங்க என தமிழ்நாட்டிற்கு அலெர்ட் செய்ததே புதுச்சேரி தான். அப்படிப்பட்ட புதுச்சேரியை மறக்க முடியுமா?.

தமிழக மக்களைப் போலவே, புதுச்சேரி மக்களும் கடந்த 30 ஆண்டுகளாக என்னை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த விஜய் தமிழகத்துக்கு மட்டும்தான் குரல் கொடுப்பார் என நினைக்காதீர்கள். புதுச்சேரி மக்களுக்கும் சேர்ந்து குரல் கொடுப்பேன். அது எனது கடமையும்கூட.

புதுச்சேரி அரசாங்கம் தமிழகத்தில் உள்ள திமுக அரசாங்கத்தை போன்றது கிடையாது. வேறு ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு தன்னெழுச்சியாக வரக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் இல்லாமல் இந்த அரசு நடந்து கொள்கிறது. அதற்காக புதுச்சேரி முதல்வருக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை பார்த்தாவது தமிழகத்தில் உள்ள திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் கற்றுக் கொள்ள மாட்டார்கள். வரப் போகின்ற தேர்தலில் அவர்கள் 100% கற்றுக் கொள்வார்கள்.  மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

புதுவை அரசு கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரியை  மத்தியஅரசு எந்த விஷயத்திலும் கண்டு கொள்ளவில்லை என்பது மக்களுக்கே தெரியும். மாநில அரசு கோரிக்கை மட்டுமா அவர்கள் கண்டு கொள்ளவில்லை? இங்கு வளர்ச்சி ஏற்பட அவர்கள் துணை நிற்கவில்லை என கேள்விப்படுகிறோம். புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்க வில்லை. பலமுறை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட ஐந்து மில்கள், பல்வேறு தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க இன்னும் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அவர்கள் எதையுமே செய்யவில்லை. புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனி உருவாக வேண்டும் என்ற எண்ணம் கூட கிடையாது. இது குறித்து யார் பேசினாலும் அவர்களின் காதுகளில் விழவே இல்லை.

தமிழ்நாட்டை ஒதுக்குவது போல், புதுச்சேரியையும் மத்திளஅரசு ஒதுக்கக்கூடாது. இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத இடம் புதுச்சேரிதான். புதுச்சேரி மக்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிகொள்கிறேன்.

திமுகவை நம்பாதீர்கள்; அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள். வரவிருக்கும் புதுச்சேரி தேர்தல் களத்தில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும்… வெற்றி நிச்சயம் ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.