சென்னை:  மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்று கூறி வந்த நிலையில்,  திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு  செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதையடுத்து, மதிமுக தனி சின்னத்தில் போட்டி என வைகோ தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக சார்பில் தேர்தல் தொடர்பான குழுக்கள் அமைக்கப்பட்டு?  கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடுகளை அறிவித்து வருகிறது. ஏற்கனவே கம்யூனிஸ்டு கட்சி உள்பட சில கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

திமுக கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இன்று திமுக – மதிமுக இடையிலான 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “மதிமுகவிற்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுடனான ஆலோசனைக்கு பின் எந்த தொகுதி என்பது பற்றி அறிவிக்கப்படும். நேரம் இருக்கிறது. மாநிலங்களவை சீட் வழங்குவது குறித்து பின்னர் பேசப்படும். தனிச் சின்னத்தில் மதிமுக போட்டியிடும்” என்று தெரிவித்தார்.