புதுக்கோட்டை: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுகதான் தாமதம் செய்கிறது என்று கூறிய கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் இருந்தால்தான் அந்தக் கூட்டணிக்கு மதச்சார்பின்மை என்ற அடையாளம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் குரல் எழுந்துள்ளது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது திமுகவை கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டி இருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பம், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே குழு அமைக்கப்பட்டு விட்டனது. ஆனால், குழு அமைக்காமல் தாமதிப்பது திமுகதான் என்றார். இதுவே விமர்சனங்களுக்கு காரணமாக அமைந்து வருகிறது.
திமுக குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டால், கூட்டணி தொடர்பான எந்தவொரு விமர்சனங்கள் எழாது. இல்லாவிட்டால் சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசியவர், கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யும்போது சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அவை அனைத்தும், முகூர்த்த நேரத்தின்போது எல்லாம் சரியாகி விடும் என்பதைப்போல, காங்கிரஸ்-திமுக கூட்டணி பேச்சுவார்த்தையும் தேர்தல் நேரத்தில் சரியாகிவிடும் என்றார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தால்தான் அந்தக் கூட்டணிக்கு மதச்சார்பின்மை என்ற அடையாளம் கிடைக்கும். அப்போதுதான் சிறுபான்மையின மக்களுக்கு நம்பிக்கை உருவாகும். இல்லாவிட்டால் நம்பிக்கை ஏற்படாது என்றவர், காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட அளவுக்குதான் வாக்குகள் உள்ளன. ஆனால், கூட்டணியில் சேர்ந்துவிட்டால் எங்களை கூட்டலாக மட்டும் பார்க்கக் கூடாது, பெருக்கலாக பார்க்க வேண்டும் என்றார்.
விஜய் பெரிய நடிகர். அவருக்கென்று ரசிகர் கூட்டம் உள்ளது. அது வாக்கு வங்கியாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், தேர்தலில் வெற்றி கிடைக்குமா என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
[youtube-feed feed=1]