சென்னை: தொலைதூரக்கல்வி மூலம் படித்ததாக மோசடி சான்றிதழ் வழங்கிய விவகாரம் தொடர்பாக  சென்னை பல்கலைக்கழக உதவி பதிவாளர் உள்பட 5பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு பணியில் உள்ளவர்கள், வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள், செல்வந்தர்கள், வியாபாரிகள் என பல தரப்பினர் தொலைதூரக் கல்விமூலம் படித்து பட்டங்களை பெற்று வருகின்றனர். ஆனால், கல்லூரி சென்று நேரடியாக கல்வி பயில்பவர்களுக்கும், தொலைதூரக் கல்வி மூலம் அஞ்சல் வழி கல்வி பயில்வர்களுக்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. +2 படித்தவர்கள்தான் பட்டம் பயிலக் கூடிய சூழல் தற்போது திறந்தநிலை கல்வியிலும் உருவாகியுள்ளது. இந்த திறந்த நிலை கல்வி முறையை நாடு முழுவதும் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகமும், தமிழகத்தில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் வழங்குகிறது. இதனால்,  சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றீசல் போலத் தோன்றிய தனியார் பயிற்சி மையங்கள், திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்வியை வழங்கி வந்தன.

இதில் பல முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களை அடுத்து, பல்கலைக்கழக மானியக் குழு அதற்கு தடை விதித்தது. மேலும், தமிழ் நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள், தமிழகத்திற்குள் மட்டுமே தொலைநிலைக் கல்வியை வழங்க முடியும். அதன் பயிற்சி மையத்தை வேறு மாநிலங்களில் நிறுவக் கூடாது என்றும் யூ.ஜி.சி கூறிவிட்டது.

இதனால், தனியார் நிறுவனங்கள், தொலைதூர கல்வி மூலம் பட்டம் பெற்றவர்களை வேலைகளில் அமர்த்துவதில்லை. ஆனால், அரசு, தொலைதூரக் கல்வி செல்லும்என அறிவித்து உள்ளது. இதனால், இதில் பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. படிக்காமலேயே படித்ததாக கூறி, சான்றிதழ்கள் பெறுவதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதில் பல லட்சங்கள் கைமாற்றி வருவதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக தமிழகஅரசு ஆய்வு மேற்கொண்டது.

இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி திட்டத்தில் மட்டும் படிக்காமலேயே 116பேர் முறைகேடாக படித்ததாக சான்றிதழ் பெற முயற்சித்து வந்த விவகாரம் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்யத தமிழக உயர்கல்வித்துறை குழு அமைத்து விசாரணை மேற்கொண்டது. அதில் முறைகேடு நடைபெற்றது உறுதியான நிலையில், சம்பந்தப்பட்ட நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசு, விசரணை குழு பரிந்துரை செய்தது.

விசாரணை குழுவின் பரிந்துரைபடி தொலைதூர கல்வி திட்டத்தின் உதவி பதிவாளர் உள்பட  5 அதிகாரிகள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த  5 பேரில் இருவருக்கு பணி ஓய்வு என்பதால், அவர்களுக்கான  ஓய்வூதிய பலன்கள் நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.