சென்னை: சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் டிஜிட்டல் கட்டணம் மட்டுமே  வசூலிக்கப்படும் என்றும்,  பணமாக கட்டணம் செலுத்தும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் அனைத்துக் கட்டணங்களும் ஃபாஸ்டேக் (FASTag) அல்லது யு.பி.ஐ (UPI) போன்ற டிஜிட்டல் முறைகள் மூலம் மட்டுமே வசூலிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலை கட்டண மையங்களிலும் ஏப்ரல் 1, 2026 முதல் ரொக்கமாக பணம் செலுத்துவதை நிறுத்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இந்த நடவடிக்கை முழுமையான டிஜிட்டல் சுங்கச் சூழலை உருவாக்குவதையும் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் முழுமையான டிஜிட்டல் சுங்கக் கட்டண முறையை மேம்படுத்தும் நோக்கில்,  நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலும் நிறுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆலோசித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக,  தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1, 2026 முதல் ரொக்கப் பணம் செலுத்தும் முறையை நிறுத்துவதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் அனைத்துக் கட்டணங்களும் ஃபாஸ்டேக் (FASTag) அல்லது யு.பி.ஐ (UPI) போன்ற டிஜிட்டல் முறைகள் மூலம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தேசிய நெடுஞ்சாலைகளில் முழுமையான டிஜிட்டல் சுங்கக் கட்டண முறையை மேம்படுத்தும் நோக்கில், வரும் ஏப்ரல் 1, 2026 முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலும் நிறுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆலோசித்து வருகிறது.

இது நடைமுறைக்கு வந்த பிறகு, அனைத்து சுங்கக் கட்டணங்களும் ஃபாஸ்டேக் அல்லது யு.பி.ஐ (UPI) மூலம் மட்டுமே டிஜிட்டல் முறையில் செயலாக்கப்படும். மின்னணு சுங்க வசூலில் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்களை உறுதிப்படுத்தவும், சுங்கச்சாவடி செயல்பாடுகளின் திறன் மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த மாற்றம் வாகனங்களின் நெரிசலைக் குறைப்பதோடு, சுங்கப் பரிவர்த்தனைகளில் கூடுதல் வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வரும்.

கடந்த சில ஆண்டுகளில், ஃபாஸ்டேக் பயன்பாடு 98 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது நாட்டின் சுங்க வசூல் நடைமுறையை கணிசமாக மாற்றியுள்ளது. தற்போது, பெரும்பாலான சுங்கப் பரிவர்த்தனைகள் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள ஃபாஸ்டேக் மூலம் மின்னணு முறையில் தடையின்றி நடைபெறுகின்றன. அத்துடன், உடனடி டிஜிட்டல் கட்டண வசதிக்காக நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் யு.பி.ஐ (UPI) கட்டண வசதிகளும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலை விதிகளின்படி, முறையான ஃபாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிக்குள் நுழையும் வாகனங்கள் ரொக்கமாகப் பணம் செலுத்தினால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைப் போல இரண்டு மடங்கு வசூலிக்கப்படுகிறது. அதேசமயம், யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தும் பயணிகளுக்குக் கட்டணத்தில் 1.25 மடங்கு மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இத்தகைய முயற்சிகள் ரொக்கப் பரிவர்த்தனைகளைத் தவிர்த்து, டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளன.

சுங்கச்சாவடி அளவிலான ஆய்வுகளின்படி, ரொக்கப் பணம் செலுத்தும் முறையினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகனங்கள் காத்திருக்கும் நேரமும் அதிகரிக்கிறது; மேலும், இது தொடர்பான வாக்குவாதங்களும் உருவாகின்றன. எனவே, முழுமையான டிஜிட்டல் முறைக்கு மாறுவது நாடு முழுவதும் உள்ள 1,150-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்தி, பயணிகளுக்குச் சிறந்த அனுபவத்தைத் தரும்.

இந்தத் திட்டம், தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் அதிகத் திறன் கொண்ட தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை உருவாக்கி, நாடு முழுவதும் உள்ள பயணிகளுக்கு வேகமான மற்றும் தடையற்ற சேவைகளை வழங்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் பரந்த நோக்கத்துடன் ஒத்துப்போகிறது.” என்று தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]