சென்னை: புகார் முடித்து வைக்கப்பட்டது குறித்து, நீதிமன்றத்துக்கு முறையான அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்ய தவறிய, நான்கு ஐ.பி.எஸ். மற்றும் ஒரு எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக டி.ஜி.பி.,க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீதிமன்ற உத்தரவுகளை காவல்துறை உயர் அதிகாரிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என உயர் அதிகாரிகள் மதிக்காத போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தலைமைச்செயலாளர் உள்பட பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சரணடைந்து மன்னிப்பு கோரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் கடந்த இரு (2025 ஜனவரி, பிப்ரவரி) மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதை மதுரை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. அதுபோல, தமிழ்நாடு அரசின் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் சி.சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்., நிதித்துறை செயலாளர் டி.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., வருவாய் நிர்வாகத்துறை முதன்மை கமிஷனர் ராஜேஷ்லக்கானி ஐ.ஏ.எஸ்., பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், வணிகவரித்துறை கமிஷனர் டி.ஜெகன்நாதன் ஐ.ஏ.எஸ்., கருவூலம் மற்றும் கணக்குத்துறை கமிஷனர் கிருஷ்ணன் உன்னி ஐ.ஏ.எஸ்., உள்பட 6 அதிகாரிகள் விசாரணைக்கு நேரில் ஆஜராகி தங்களது செயலுக்கு மன்னிப்பு கோரினர். மற்றொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக வருவாய் துறை செயலாளர் அமுதா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, இந்து சமய அறநிலைய துறை செயலாளர் சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், அறநிலைய துறை இணை ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினர். அதைத்தொடர்ந்து, சிஎம்டிஏ தனிச்செயலாளர் பிரகாஷ் ஐஏஎஸ் அதிகாரி ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர்அதிகாரிகள் நீதிமன்ற கடும் சொல்லுக்கும் ஆளாகும் நிலை தொடர்கிறது.
இநத் நிலையில், கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு ஒன்றில், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். விசாரணையின் போது, ‘புகார் விசாரித்து முடித்து வைக்கப்பட்டது’ என, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கோபமடைந்த நீதிபதி, புகாரை முடித்து வைப்பதாக இருந்தால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். புகார்தாரருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். இதை ஏன் செய்யவில்லை என காவல்துறை அதிகாரிகளை சாடியதுடன், இதை செய்ய தவறியது, செயல் நடைமுறை குளறுபடி என கூறியதுடன், வழக்கு முடித்து வைக்கப்பட்ட 2017 முதல், இதுவரை குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிய, 11 பேருக்கு எதிராக, டி.ஜி.பி., துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பான இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதா என்பதை கண்காணிக்க தவறிய, போலீஸ் எஸ்.பி.,க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கடந்த 2015 முதல், இதுவரை கடலுார் மாவட்ட எஸ்.பி.,யாக பதவி வகித்த, நான்கு ஐ.பி.எஸ். அதிகாரிகள் பி.சரவணன், எம்.ஸ்ரீ அபினவ், எஸ்.சக்தி கணேசன், எஸ்.ஜெயகுமார் மற்றும் தற்போதைய தஞ்சாவூர் மாவட்ட எம்.பி., ராஜாராம் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகார்கள் மீது விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையோ, புகாரை முடித்த அறிக்கையோ, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டியது கட்டாயம். இது சம்பந்தமாக, காவல் துறையினருக்கு உரிய அறிவுறுத்தல்களை, நான்கு வாரங்களில் டி.ஜி.பி., பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]