மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஜூரியன் விரிகுடாவிற்கு அருகிலுள்ள கடற்கரையில் ஒரு மர்மமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அதற்காக பிற நாடுகளின் விண்வெளி ஆய்வு மைய்யங்களின் உதவியை நாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்கள் விண்வெளி ஏவுகணை வாகனத்தில் இருந்து வெளியான சேதமடைந்த பகுதியாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இந்த பொருள் வெளிநாட்டு விண்வெளி ஏவுகணை வாகனத்திலிருந்து விழுந்திருக்கலாம் என்பதால் பிறநாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனங்களிடம் இதுகுறித்த தகவலை தெரிவித்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த ட்வீட்டைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பொருள்களின் தோற்றம் பற்றிய பல்வேறு ஊகங்கள் வெளியாகியுள்ளது, சிலர் இதனை கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்து சென்ற எல்விஎம் 3 ராக்கெட்டின் பகுதியாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

வேறு சிலர், காணாமல் போன MH370 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்துடன் தொடர்புடைய பொருளாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் விமான நிபுணர் ஜெஃப்ரி தாமஸ் இந்த சாத்தியத்தை நிராகரித்தார், குப்பைகள் போயிங் 777 மற்றும் MH370 இன் எந்தப் பகுதிக்கும் பொருந்தவில்லை என்று குறிப்பிட்டார்.

விசாரணைகள் தொடர்வதால், மேற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் காணப்படும் பொருளைச் சுற்றியுள்ள மர்மத்தை அவிழ்க்க ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.