இண்டிகோ விமான சேவை நாடு முழுவதும் தொடர்ந்து 8-வது நாளாகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மும்பையில் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 8-ஆம் தேதி, தங்களது விமான வலையமைப்பு “முழுமையாக சீரானது” என்றும், 90% விமான சேவைகள் வழங்கப்பட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிச 2 முதல் இன்றுவரை 4500க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதால் சுமார் ₹827 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனைகள் குறித்து விளக்கம் அளிக்க DGCA (விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு துறை) டிசம்பர் 6-ஆம் தேதி கொடுத்த நோட்டீசிற்கு நேற்று விளக்கமளித்த இண்டிகோ, “செயல்பாட்டு அளவு பெரிது — சரியான காரணம் ஒன்றை மட்டும் காட்டுவது இப்போது சாத்தியமில்லை,” என்று சொல்லி கூடுதல் அவகாசம் கேட்டது.

இந்த நிலையில், இண்டிகோ நிறுவனத்தின் செயல்பாடுகளால் அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய வழித்தடங்களை இண்டிகோ நிறுவனத்திடம் இருந்து வேறு நிறுவனங்களிடம் ஒப்படைக்க அரசு தீர்மானித்துள்ளது.
மேலும் நாளொன்றுக்கு சுமார் 100 விமான சேவைகளைக் குறைக்கவும் அறிவுறுத்தியுளளது.
இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியை பயன்படுத்தி மற்ற விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை பன்மடங்கு உயர்த்தியதை அடுத்து 0–500 கி.மீ: ₹7,500 க்கு மேல் வசூலிக்கக் கூடாது, 1500 கி.மீ மேல்: அதிகபட்சம் ₹18,000 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.