சென்னை காளிகாம்பாள் கோவில்
காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை காமாட்சியின் 12 அம்சங்களில் ஒன்றாக இந்த அன்னை திகழ்கிறாள். பொதுவாக காளியின் அம்சமான உக்கிரம் இவளுக்கு இல்லை இந்த தாய் சாந்த செளரூபியாக கருணை பொங்கும் முகத்துடன் காட்சி அளிக்கிறாள்.
சென்னை பாரிமுனையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வது காளிகாம்பாள் கோயில் . 1640 ல் இந்த கோயில் ஆங்கிலேயர்களின் கோட்டையான செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்ததாகவும் பின்னர் ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தற்போதுள்ள தம்பு செட்டி தெருவிற்குக் கோயில் மாற்றப்பட்டுள்ளது.
1677 ஆம் ஆண்டு வேலூர் செஞ்சி ஆற்காடு என இந்தியாவின் தென்பகுதிகளைக் கைப்பற்றிய சத்ரபதி சிவாஜியின் அடுத்த இலக்கு சென்னையாக இருக்குமோ என்கிற பதட்டம் நிலவி வருகையில் அதற்கேற்றார் போல் சிவாஜியின் தூதுவர்கள் இங்கு மூன்று முறை சென்னை ஆளுநரிடம் வந்து பேசி சென்றார்கள் , ஆனால் சிவாஜியின் படையெடுப்பு நிகழவில்லை.
ஆனால் 1677 அக்டோபர் 3 ஆம் தேதி சத்ரபதி சிவாஜியே சென்னைக்கு மாறு வேடத்தில் வந்து இந்த காளிகாம்பாளை வணங்கியிருக்கிறார்.
யாதுமாகி நின்றாய் காளி என்கிற பாரதியின் வரிகள் இந்த காளியை நோக்கிப் பாடப்பட்டது. சென்னையின் கோட்டை மற்றும் படை பலத்தை வேவு பார்க்க மாறு வேடத்தில் வந்தவர் இந்த கோவிலில் வழிபட்டுச் சென்றிருக்கிறார். மேலும் சக்தி தாசரான மகாகவி பாரதி சுதேசமித்திரன் பத்திரிக்கையில் பணியாற்றிய போது இந்த காளியை மனமுருகி வழிபட்டு நிறைய காளியைப் போற்றும் கவிகளை இயற்றினார். இக்கோயிலில் விஸ்வகர்மாவிற்குத் தனி சன்னிதி உள்ளது .
இங்கு ஈசன் கமடேஸ்வரராகவும் அருணாச்சலேஸ்வரராகவும், எழுந்தருளியுள்ளார். விநாயகர் சித்தி புத்தி விநாயகராகவும் , முருகன் வட கதிர்காம முருகனாகவும் எழுந்தருளியுள்ளார் . காயத்திரி தேவிக்கு இங்குத் தனி சன்னிதி உள்ளது . திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் அன்னைக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வர வேண்டும் ,\.
மேலும் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் ராகு காலத்தில் விளக்கேற்றி வர வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து குழந்தை வரம் கிடைக்கப்பெற்றவர்கள் நிறைய உள்ளனர் .. வாழ்வில் நாட்டமின்றி தன்னை சரணடைபவர்களுக்கு உடனே முக்தி அளிப்பவள் இந்த காளிகாம்பாள்.