ஸ்டுட்கர்ட், ஜெர்மனி :

லகெங்கும் வாழும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களின் புனித தலமான மெக்காவில் உள்ள பெரிய மசூதியின் மையப்பகுதியாக இருக்கும் புனித காபா-வின் கதவை வடிவமைத்த பொறியாளர் ஜெர்மெனியில் மரணமடைந்தார்.

1975ம் ஆண்டு சவுதி அரேபிய மன்னராக பதவியேற்ற காலித் பின் அப்துல் அஜிஸ் ஆட்சிக்காலத்தில் இந்த கதவு நிறுவப்பட்டது. இந்த கதவை வடிவமைக்கும் பணியை சிரியா நாட்டை சேர்ந்த பொறியாளர் முனீர் ஷாரி அல் ஜுந்தி என்பவரிடம் மன்னர் காலித் ஒப்படைத்தார்.

மெக்கா நகரில் அந்நாளில் புகழ் பெற்ற பொற்கொல்லராக விளங்கிய ஷேக் மொஹமது பத்ர் என்பவரின் பட்டறையில் செய்யப்பட்ட இந்த கதவில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளை ஷேக் அப்துல் ரஹீம் புகாரி என்பவர் மேற்கொண்டார்.

உலகின் மிக விலையுயர்ந்த தாய்லாந்தின் மக்கா மூங் மரத்தில், 280 கிலோ தங்கத்தை கொண்டு செய்யப்பட்ட இந்த கதவு, அரை மீட்டர் கனம், 3 மீட்டர் உயரம், 2 மீட்டர் அகலம் கொண்டது.

1978ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கதவில் இதை வடிவமைத்த அல் ஜுந்தி-யின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மெக்காவுக்கு புனித பயணம் செல்லும் இஸ்லாமியர்கள் இந்த புனித காபாவை சுற்றி வருவது வழக்கம்.