புதுச்சேரி

புதுச்சேரி அமைச்சர்களில் யார் யாருக்கு எந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.  இதில் முதல்வராக ரங்கசாமி மட்டும் பதவி ஏற்றார்.  கட்சிகளுக்கிடையே அமைச்சர் எண்ணிக்கை குறித்த இழுபறி நிலவியதால் வெகு நாட்களாக அமைச்சரவை அமைக்கப்படாமல் தற்போது அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.

இந்த அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் குறித்த விவரங்கள் அடங்கிய  பட்டியலை முதல்வர் ரங்கசாமி இன்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் வழங்கினார்.   இந்த பட்டியலுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.  அதையொட்டி புதுவை அரசுத் துறைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் முதல்வர் ரங்கசாமிக்கு, கூட்டுறவுத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம், அறநிலையத்துறை, துறைமுகம், அறிவியல்-தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், தகவல் மற்றும் விளம்பரம் உள்ளிட்ட 13 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் நமச்சிவாயம் : உள்துறை, மின்துறை, கல்வி, தொழில் மற்றும் வர்த்தகம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், சைனிக் நலன்

க. லட்சுமி நாராயணன் – பொதுப்பணித்துறை, சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து, மீன்வளத்துறை, சட்டத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, அச்சகம்.

தேனி ஜெயக்குமார்:  வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, வனத்துறை, சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை.

சந்திர பிரியங்கா: ஆதி திராவிடர் நலத்துறை, போக்குவரத்து, வீட்டு வசதி, தொழிலாளர் நலத்துறை, கலை மற்றும் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை.

சாய் சரவணன் குமார்: நுகர்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, டிஆர்டிஏ, சமுதாய மேம்பாடு, நகர்ப்புற அடிப்படை சேவைகள், தீயணைப்பு, சிறுபான்மையினர் நலத்துறை