சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில்,  பொதுமக்களின்  ஆலோசனைக்கு பொது சுகாதாரத்துறை அவசர தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளது.

 தமிழகத்தில்  பருவமழை சீசன் தொடங்கி உள்ள நிலையில், காய்ச்சல் உள்பட மழைக்கால நோய்கள் பரவி வருகின்றன. இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மழை பெய்து வருவதாலும் மழைநீர் தேங்குவதாலும், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ்.-எஜிப்டை வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்களை பரப்பி வருகின்றன.  இதை தடுக்க மாநில அரசு மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது.  மேலும் சுகாதாரத்துறையினர் கொசு ஒழிப்பு பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டில்,  கடந்த 15 நாட்களில் மட்டும் 816 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளது.  மாநிலம் முழுவதும் இதுவரை 6,818 பேர் டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம், மாநிலம் முழுவதும் கடந்த 18 நாட்களில் மட்டும் 816 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது மருத்துவ மனைகளில் 583 பேர் சிகிச்சையில் உள்ளனர். மற்றொரு புறம், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்புப் பணிகளில் 27 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளாட்சிக்கு ஒரு சுகாதார அலுவலரும், மாநகராட்சிகளில் தெருக்களின் அடிப்படையில் சுகாதார அலுவலர்களும் நியமிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல் பாதிப்பு மற்றும் கொசு பாதிப்பு இருந்தால் 94443 40496, 87544 48477 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், குறிப்பாக வீடுகள் தோறும் கண்காணிப்பை முன்னெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எத்தகைய சூழலையும் எதிர்கொண்டு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ மனைகளில் டெங்கு வார்டுகளையும், படுக்கைகளையும் அமைத்து போதிய மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரத்த வங்கிகளையும் தயார் நிலையில் வைத்திருக்கவும், அவசரகால சூழல்களைச் சமாளிக்கும் வகையில் விரைவு உதவிக் குழுக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.