சென்னை: திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்!  என ஓபிஎஸ்  திமுகவில் இணைந்ததை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். மேலும்,  ஓபிஎஸ் அன்பானவர், பண்பானவர் என புகழாரம் சூட்டி உள்ளார்.

அதிமுகவில் இருந்து  நீக்கப்பட்டு, அரசியல் அனாதையாக விடப்பட்ட,  அதிமுகவைச் சேர்ந்த  முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (பிப். 27) முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில்,  திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.  ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான ஓ. பன்னீர்செல்வம் தாய்க் கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.

திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர், திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார். 2026 சட்டமன்றத்தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள்.  நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒருவர், வேறு கட்சியில் இணைவது இதுவே முதல்முறையாகும்

[youtube-feed feed=1]