டெல்லி: விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் டெல்லோ சலோ பேரணி இன்று 2வது நாளாக தொடர்கிறது. இதன் காரணமாக, எல்லைப்பகுதியில் தடுப்பு போடப்பட்டு, போக்குவரதுது நிறுத்தப்பட்டு உள்ளது. ஆயிரக்கண்ககான போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளதால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள விவசாய சட்டங்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகளின் நலன்களுக்காக அந்த சட்டங்களை திரும்ப வலியுறுத்தி வடமாநில விவசாயிகள் ரெயில் மறியல், பேரணி உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்தியஅரசை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் நேற்று முதல் தீவிரப்போராட்டத்தை கையிலெடுத்து உள்ளனர். பல மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இநத் நிலையில், அரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் மத்திய அரசை கண்டித்து, சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியை நோக்கி டிராக்டரிலும் மற்றும் நடந்தும் பேரணியாக புறப்பட்டு செல்கின்றனர். நேற்றைய பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகள் இரவு வந்ததும் பானிபட் சுங்க சாவடியருகே படுத்து உறங்கினர். காலை எழுந்ததும் மீண்டும் 2வது நாளாக தங்களது பேரணியை தொடர்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து அரியானா மற்றும் டெல்லி இடையேயான சிங்கு எல்லை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தும் நோக்கில், போலீசார் தடுப்பான்களுடன் சுருள்கம்பிகளை இணைத்து தடுப்புவேலி அமைத்து உள்ளனர். ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தற்போது விவசாயிகளின் பேரணி தேசிய நெடுஞ்சாலையில் பானிபட் சுங்க சாவடி அருகே தடுத்து நிறுத்தப்பட்டது.
அரியானாவின் சில இடங்களில் தடுப்பான்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் தண்ணீர் பாய்ச்சியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் கலைத்தனர். இதனால், பிற மாநிலங்களில் இருந்து டெல்லி செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.