டில்லி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தனது தேர்தல் அறிக்கையில் மூத்த குடிமக்களுக்கு உதவிடும் வகையில் ஷீலா ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்தியாவின் தலைநகரும், யூனியன் பிரதேசங்களில் ஒன்றுமான டெல்லியின் சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. டெல்லி முழுவதும் ஒரே கட்டமாக நடத்தப்படும் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் பிப்ரவரி 11ஆம் தேதி எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதிகளை தயாரிக்க பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இத்தகைய சூழலில், டில்லியில் உள்ள மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் ஷீலா ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பான தகவல்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டில்லி காங்கிரஸ் பொறுப்பாளர் பி.சி சாக்கோ, “தேர்தல் தொடர்பான வாக்குறுதி அறிக்கையில், ஷீலா ஓய்வூதிய திட்டம் சேர்க்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 15 ஆண்டு காலமாக மக்களுக்காக உழைத்த ஷீலா தீட்சித்திற்கு புகழ் சூட்ட திட்டமிட்டுள்ளோம். ஆம் ஆத்மி மற்றும் பாஜக மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவி வருகிறது. வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை, மின்சார கட்டணத்தில் 60 சதவீத மானியம் போன்றவையும் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும். தற்போது உள்ள ஆம் ஆத்மி அரசின் மின்சார மாணியம் வெறும் 20 சதவீத மக்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் உள்ளது.
டில்லியில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு, முழு பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் டில்லி வட மேற்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் மட்டுமே ஆம் ஆத்மி 2வது இடத்தை பிடித்திருந்தது. ஆனால் காங்கிரஸ் 5 தொகுதிகளில் 2வது இடத்தை பிடித்திருந்தது. 5 நாடாளுமன்ற தொகுதிகளில் 43 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன.
நாட்டு மக்களை குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் பதிவேடு மூலம் பிளவுப்படுத்த பாஜக நினைக்கிறது. மக்கள் இவற்றை ஏற்றுக்கொள்வார்கள் என பாஜக எதிர்பார்க்கிறது. ஆனால் மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் பதிவேடு தொடர்பான சர்ச்சைகள் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு இல்லை. இந்த தேர்தலில் ஷீலா தீட்சித் தலைமையில் முன்பு இருந்த காங்கிரஸ் அரசு செய்த நலத்திட்டங்களையும், தற்போதைய டில்லியின் பிரதான பிரச்சனைகளாக உள்ள மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் மோசமான கட்டமைப்புகள் குறித்தும் எடுத்துக்கூறி பிரச்சாரம் மேற்கொள்வோம். இவற்றுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் இணைப்போம். எங்களுடைய தேர்தல் அறிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்” என்று தெரிவித்தார்.