டெல்லி: மத்திய அரசு கொண்டுவந்த விவசாயச் சட்டங்களை எதிர்த்து ‘டெல்லி சலோ’ (டெல்லிக்கு செல்) என்ற போராட்டத்தில் பங்குபெற விவசாயிகள் பஞ்சாப் அரியானா எல்லைப் பகுதியில் குவிந்துள்ளனர். இதனால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் அரியான மாநிலங்களுக்கு இடையே மோதல் போக்கும் நீடித்து வருகிறது. இரு மாநில அமைச்சர்களும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பஞ்சாப் மற்றும் அரியாணா மாநிலங்களில் விவசாய சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த நிலையில் இந்த டெல்லி சலோ போராட்டம் 26ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி டெல்லியை இணைக்கும் ஐந்து நெடுஞ்சாலைகள் வழியாகப் பயணித்து டெல்லியை சென்றடைவது என்பது விவசாயிகளின் திட்டமாக இருந்தது.
இதையடுத்து போராட்டத்தை தடுக்கும் வகையில் அரியானா மாநில அரசு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி போராட்டத்தை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டது. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஹரியானா வழியாக டெல்லி செல்லும் பெருவழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. சாலையின் குறுக்கே பெரிய கற்கள் போடப்பட்டன. பல இடங்களில் கண்டெய்னர்களை நிறுத்தியும் சாலைகறை மறித்தனர். பல இடங்களில் சாலை தடுப்புகளை வைத்தும், தடுக்கப்பட்டன. ஆனால், பல இடங்களில் போலீஸாரின் தடையை மீறி போராட்டக்காரர்கள் முன்னேறிச் செல்ல முயன்றதால் பதற்ற நிலை ஏற்பட்டது. விவசாயிகள் கீழே இறங்கி அவற்றை அகற்ற தொடங்கினார்கள். அதனால், அவர்கள் மீது அரியானா மாநில போலீஸ் படையினர் தண்ணீரை பீச்சி அடித்துக் கலைக்க முற்பட்டார்கள் சில இடங்களில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும்வெடிக்கப்பட்டன.
மூன்று இடங்களில் பஞ்சாப் மாநில விவசாயிகள் சாலையின் குறுக்கே போடப்பட்டிருந்த பெரும் கற்களை அகற்றி விட்டு டிராக்டர் மற்றும் லாரிகளில் தங்கள் பயணத்தை தொடர்ந்தார்கள். பல அடைக்கப்பட்ட பெருவழிகளுக்கு அருகே பஞ்சாப் மாநில விவசாயிகள் அந்த இடத்திலேயே முகாம் அமைத்து அமைதியாக அமர்ந்தனர் தங்களுக்கு வழிவிடும் வரை தாங்கள் அந்த இடத்திலேயே தங்கி இருக்கப் போவதாகவும் அரியானா மாநில அரசுக்கு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, டெல்லியில் அமைதியான முறையில் மத்திய அரசின் விவசாயத்தை சட்டங்களுக்கு தங்கள் எதிர்ப்பை காண்பிக்க புறப்படும் விவசாயிகளை தடுத்து நிறுத்தாதீர்கள் என்று அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரை இன்று பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங்,கண்டித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அம்ரிந்தர் சிங் டுவிட்டர் பதிவுகளுக்கு அரியானா முதலமைச்சர் கட்டார் கடும் கண்டனம் தெரிவித்தார். அப்பாவி விவசாயிகளை பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் தூண்டிவிடுகிறார் என்று கட்டார் குற்றம்சாட்டினார். இதனால் இரு மாநில அரசுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.