டெல்லி:  பல மாநிலங்களின் எதிர்ப்புகளை மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்பு சட்டம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. 2021 டிசம்பர் 30ம் தேதி, அதாவது இன்றுமுதல் அமலுக்கு வருவதாக மத்தியஅரசின் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அணைகளால் மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களை தடுக்கும் வகையில் அணை பாதுகாப்பு மசோதா கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்டது. ஆனால், அதை நிறைவேற்ற முடியாமல் கடந்த கால அரசுகள் திணறி வந்தன. பின்னர் கடந்த 108ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த மசோதா  மூலம் தேசிய அணைகள் பாதுகாப்பு குழு ஒன்றை உருவாக்கி நாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த மசோதாவில் ஷரத்துக்கள் உள்ளன. ஆனால், இது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக வும்,  மாநில அரசின் உரிமை பட்டியலில்  அணைகளை  மத்தியஅரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வது  மாநில அரசின் உரிமைகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வந்தன.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பாஜக பெரும்பான்மையுடன் இருப்பதால்,  கடந்த 2019ம் ஆகஸ்டு 2ந்தேதி மக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா  நிறைவேற்றப்பட்டது.  அதைத்தொடர்ந்து,  கடந்த 2ம் தேதி மாநிலங்களவையில் விவாதங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனடர். மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள்  வலியிறுத்தியது. ஆனால்,  எதிர்க்கட்சிளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் மத்தியஅரசு மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியது. அதற்கு அவர் அனுமதி வழங்கிய நிலையில், மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.

அதன்படி அணை பாதுகாப்பு மசோதா இன்றுமுதல் (டிசம்பர் 20, 2021) அமலுக்கு வருகிறது.

அணை பாதுகாப்பு மசோதா விவரம்:

2018 அணை பாதுகாப்புச் சட்டம் என்பது நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பிற்கு ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட சட்டம்.

உலகில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அணைகளின் எண்ணிக்கை அதிகம். 5254 பெரிய அணைகள் ஏற்கனவே உள்ள நிலையில் மேலும் 447 அணைகள் கட்டப்பட்டுவருகின்றன.

இந்தியாவில் தற்போது உள்ள அணைகளில் 75 சதவீத அணைகள் 25 ஆண்டுகள் பழமையானவை. 164 அணைகள் 100 வருடத்திற்கு மேல் பழமையானவை.

இந்தியாவில் இதுவரை 36 அணை உடைப்பு நிகழ்வுகள் ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 11 முறையும் உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, உத்தராகண்ட் ஆகியவற்றில் ஒரு முறையும் அணை உடைப்புகள் ஏற்பட்டுள்ளன.

அணை பாதுகாப்புக்கான தேசிய கமிட்டி, மத்திய அணை பாதுகாப்பு அமைப்பு, மாநில அணை பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் மத்திய நீர் ஆணையம் அணை பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களை மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால், அதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடையாது.

தற்போது அறிமுகப்படுத்தப்படும் அணை பாதுகாப்பு மசோதா, மத்திய அளவிலும் மாநில அளவிலும் அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வழிவகுக்கிறது. இதன் மூலம் நாடு முழுவதும் அணை பாதுகாப்பை தரப்படுத்த முடியுமென மத்திய அரசு நினைக்கிறது. அணையின் உரிமையாளரையே அணை பாதுகாப்பிற்கு இந்த சட்டம் பொறுப்பாக்குகிறது.

2018ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி அணை பாதுகாப்பிற்கான தேசிய கமிட்டி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் ஆகியவை உருவாக்கப்படும். அணை பாதுகாப்பிற்கான தேசிய கமிட்டி கொள்கைகளை உருவாக்கும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அவற்றைச் செயல்படுத்தும்.

இந்த அமைப்புகள், மாநில அணை பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து செயல்படும். அணைகள் குறித்த தேசிய அளவிலான தகவல் களஞ்சியம் உருவாக்கப்படும். அணைகளில் ஏற்படும் விபத்துகள் பதிவுசெய்யப்படும்.

இரு மாநிலங்களினுடைய அணை பாதுகாப்பு அமைப்புகளிடம் ஏற்படும் முரண்பாட்டை இந்த அமைப்புகள் சரிசெய்யும். அணையின் உரிமையாளருக்கும் அணை அமைந்திருக்கும் மாநிலத்திற்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளையும் தீர்க்கும்.

ஒரு மாநிலத்திற்குச் சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால், மாநில அணை பாதுகாப்பு அமைப்பு செய்ய வேண்டியவற்றை தேசிய ஆணையம் செயல்படுத்தும்.

இந்தச் சட்டத்தின்படி அணைகளின் பாதுகாப்பிற்கான மாநில கமிட்டியும் மாநில அமைப்பும் உருவாக்கப்படும்.

ஒவ்வொரு அணையின் உரிமையாளரும் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளக்கூடிய அமைப்பை உருவாக்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் வரக்கூடும், எவ்வளவு தண்ணீர் வெளியேற்றப்படக்கூடும் என்ற தகவல்களை வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு அணைக்கும்அபாய கணிப்பு அறிக்கை, நெருக்கடிகால நடவடிக்கை அறிக்கை ஆகியவற்றை ஐந்தாண்டுகளுக்குள் உருவாக்க வேண்டும். புதிய அணைகளுக்கு, அவை கட்டப்படும் முன்பே உருவாக்க வேண்டும்.

தன்னிச்சையான நிபுணர் குழுவால் அணையின் பாதுகாப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். முதல் அறிக்கை ஐந்தாண்டுகளுக்குள் உருவாக்கப்பட வேண்டும். பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.

அணை பாதுகாப்புக் குழுவைப் பணிசெய்யவிடாமல் தடுப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும். அணை பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் தவறு ஏற்படும்போது, சம்பந்தப்பட்ட துறையின் தலைவர் அதற்குப் பொறுப்பாவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.