புதுடெல்லி: சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவே ரூ.1 லட்சம் ஏமாந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி லோதாவும், உச்சநீதிமன்றத்தின் மற்றொரு ஓய்வுபெற்ற நீதிபதி பி.பி.சிங்கும் அடிக்கடி மின்னஞ்சல் தொடர்பில் இருப்பவர்கள்.
இந்நிலையில் திடீரென ஒருநாள், பி.பி.சிங்கிடமிருந்து அவசர தேவையாக ரூ.1 லட்சம் கேட்டு மின்னஞ்சல் வந்ததுள்ளது.

அதுவும் அதிகாலை 1.40 மணிக்கு அந்த மின்னஞ்சல் வந்துள்ளது.
தனது உறவினரின் அவசர சிகிச்சை செலவுக்காக என குறிப்பிட்டு அனுப்பப்பட்டிருந்த அந்த மின்னஞ்சலுக்கு, ஃபோனில் தொடர்புகொள்ள வேண்டாமெனவும், மின்னஞ்சலிலேயே பதிலளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீதிபதி லோதாவும் இரண்டு தவணைகளாக (தலா ரூ.50000) அந்தப் பணத்தை, மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த கணக்கிற்கு பரிவர்த்தனை செய்துள்ளார். இந்த சம்பவம் நடந்து முடிந்த சில நாட்கள் கழிந்த பின்னர், இரண்டு நீதிபதிகளும் பேசிக்கொண்டிருந்த போதுதான் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

தன்னுடைய மின்னஞ்சலிலிருந்து தொடர்ந்து பணம் கேட்டு செய்தி வருவதாக பலரும் தன்னிடம் கூறுவதாக பி.பி.சிங் கூறியபோதுதான், லோதாவும் தான் பணம் அனுப்பிய விபரத்தைக் கூறியிருக்கிறார்.

அதன்பிறகுதான், இந்தப் பிரச்சினை காவல்துறைக்கு சென்று, தற்போது உச்சகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தொடர்புடைய வழக்கு என்பதால், காவல்துறையினர் தனி கவனம் எடுத்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.