சிட்னி: ஆஸ்திரேலியாவில், இந்தியா- ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து, நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் ஆகிய ஆறு அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் இன்று (27/11/2020) தொடங்குகிறது. இன்று நடைபெறும் முதல் போட்டி, இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் இடையே நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் ஒரு நாள் தொடரிலும், தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் டி-20 தொடரிலும், நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டி-20 தொடரிலும் பங்கேற்க உள்ளனர். ஒரே சமயத்தில் மூன்று கிரிக்கெட் தொடர்கள் தொடங்குவதால்,அதைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று காலை தொடங்கியது. இந்திய அணியில் ரோஹித் சர்மா விளையாடாத நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்தியா அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணி வீரர்கள்: ஷிகர் தவன், மயங்க் அகர்வால், விராத் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, ஷமி, சைனி, ப்[உம்ரா, சாஹல்
ஆஸ்திரேலியா அணி வீரர்கள்: வார்னர், ஃபின்ச், ஸ்மித், மர்னஸ், மர்கஸ், கேரி, மேக்ஸ்வெல், கம்மின்ஸ், ஸ்டார்க், ஆதம், ஜோஷ்
கொரோனா தொற்று பரவலால் இந்திய அணியின் சில தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டு வந்தன. மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடிய பிறகு, இந்திய அணி விளையாடும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இதனால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. போட்டியை காண மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.