பெங்களூரு: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகாரின் மீது கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்புமாறு பெங்களூரு காவல் ஆணையருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2019ம் நவம்பர் 23ந்தேதி நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் வாக்குகள் பற்றி விமர்சித்த பேசியதாக முதல்வர் எடியூரப்பா மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்தது.
வழக்கின் விசாரணையின்போது, எடியூரப்பா மீது, தேர்தல் விதிமுறை மீறல் இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வழக்கு நடவடிக்கை கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், வழக்கை விசாரித்த பெலாகவி மாவட்ட முதன்மை நீதியியல் நடுவர் மன்ற நீதிபதி வரிஷ் குமார், எடியூரப்பா மீதான சட்டபூர்வ நடவடிக்கை கைவிடப்பட்டதை ஏற்க முடியாது என்றும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்கள் இருப்பதாகவும் மக்கள் பிரதிநிதித் துவச்சட்டம் ,இந்திய தண்டனைச்சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் முதலமைச்சர் எடியூரப்பா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து, சம்மன் அனுப்புமாறு, பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையருக்கு நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதியின் அதிரடி உத்தரவு கர்நாடக மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.