ஸ்ரீநகர்
காஷ்மீர் சிறப்புச் சட்டமான விதி எண் 35 ஏ நீக்கப்பட வேண்டும் எனவும் நீக்கக் கூடாது எனவும் கூறும் நேரத்தில் அது குறித்து நாம் தெரிந்துக் கொள்வோம்.
காஷ்மீர் ராஜ்ஜியம் இந்தியாவுடன் இணைந்த போது அந்த பகுதிக்கு ஒரு சில சிறப்புச் சலுகைகள் கோரப்பட்டன. அதை ஒட்டி அந்த மாநிலம் உருவாகும் நேரத்தில் அந்த மாநில சொத்துக்கள் குறித்து அரசியலமைப்பு சட்டத்தில் விதி எண் 35ஏ உருவாக்கப்பட்டது. இந்த மாநிலத்தில் வசிப்பவர்கள் மட்டுமே மாநிலத்தின் நிரந்தர குடிமகன்களாகக் கருதும் உரிமையை இந்த விதி அளித்தது.
இவ்வாறு நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு, உதவித்தொகை உள்ளிட்ட பலவித சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டன. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே காஷ்மீரில் அசையா சொத்துக்களை வாங்கவும் விற்கவும்முடியும் என்பதாகும். கடந்த 1954 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி அந்த மாநிலத்தில் வசித்தவர்களும் தொடர்ந்து 10 வருடங்கள் மாநிலத்தில் வசிப்பவர்களும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் ஆவார்கள்..
காஷ்மீர் மாநிலம் மட்டுமே இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்திய மாநிலம் ஆகும். இதனால் காஷ்மீர் மக்கள் தங்கள் மாநிலத்தில் இந்துக்களை அரசு குடி புகச் செய்யலாம் என்னும் அச்சத்தில் உள்ளனர். இதனால் இந்திய அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் கடந்த 1989லிருந்து நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்க தொடங்கியது.
காஷ்மீர் மாநிலத்தில் இரு நாடுகளுமே உரிமை கொண்டாடி வருவது தெரிந்ததே. ஆனால் ஒரு பகுதி இந்திய ஆட்சியிலும் மற்ற பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலும் உள்ளன. இரு நாடுகளுமே காஷ்மீரின் முழுப் பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயல்கின்றன. இது இரு நாட்டு அரசுக்கும் தீராத ஒரு பிரச்சினையாக உள்ளது.
தற்போது இந்த விதி எண் 35 ஏ காஷ்மீர் இஸ்லாமியர்களுக்கும் பாஜக ஆளும் மத்திய அரசுக்கும் கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. காஷ்மீர் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் உள்ளதாகவும் பொதுக்கூட்டங்கள் தடை செய்யப்பட்டதாகவும் வரும் தகவல்கள் நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.