ஜலந்தர்: பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து 13 மக்களவை இடங்களையும் கைப்பற்றுவோம் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் அம்மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர்.
ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது; காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஒரு அர்ப்பணிப்பு ஒப்பந்தம். காங்கிரசின் நியாய் திட்டத்தை, சாத்தியப்படக்கூடிய ஒன்றாக மக்கள் நம்புகிறார்கள். மோடியின் மோசடி வாக்குறுதிகளோடு ஒப்பிடுகையில், இது சாதாரணமானதே மற்றும் எளிதாக செய்துமுடிக்கக்கூடியதே.
மாநிலத்தில் மொத்தமுள்ள 13 மக்களவை இடங்களையும் வெல்ல வேண்டுமென்பதே எங்களின் இலக்கு. இம்மாநிலத்தில் நிலவும் எங்களுக்கு ஆதரவான சூழலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையும் காங்கிரசுக்கு சாதகமாக உள்ளன. ஆனால், மக்கள்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சிக்கு இந்தமுறை இங்கு வாய்ப்பில்லை. அக்கட்சி மக்களை ஏமாற்றிவிட்டது. பஞ்சாபில் தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதற்கு பல காரணிகள் இருந்தாலும், முக்கியமானது வேளாண்மை சிக்கல், வேலைவாய்ப்பின்மை மற்றும் போதைப் பொருள் கடத்தல்.
காங்கிரஸ் முதல்வர் அமரீந்தர் சிங்கின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது. விவசாயிகளின் தற்கொலையை ஆண்டிற்கு 1000 என்பதிலிருந்து 300 என்பதாக குறைத்துள்ளோம். மேலும், போதைப் பொருள் கடத்தலும் பெரியளவில் தடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
– மதுரை மாயாண்டி