டெல்லி:
அயோத்தியில் பிரமாண்ட ராமர்கோவில் கட்ட வேண்டும் என்பதே காங்கிரசின் ஆசை என்று ராஜஸ்தான் மாநில துணைமுதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி விவகாரம் பல ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், கடந்த 9ந்தேதி (09-11-2019) உச்சநீதி மன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதன்படி, சர்ச்சைக்குறிய இடம் இந்துக்களுக்கே சொந்தமானது என்றும், அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டவும் அனுமதி வழங்கியது. மேலும், மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு 5 ஏக்கர் நிலம் அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
உச்சநீதி மன்றத்தின் உத்தரவுக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சில கட்சிகளும், சில இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் , ‘அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் வரவேற் கிறார்கள். அங்கு பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் விருப்பம். இந்த தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
ராஜஸ்தானில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றியின் மூலம் மக்கள் ஆதரவு மீண்டும் நிரூபணமாகியுள்ளது. மராட்டியத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மலரும் சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் இது எதிரொலிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.