ஜெய்ப்பூர்:
ஜெய்ப்பூரில் பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு எதிராக ஆளும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிசிசி தலைவர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர். இவர்கள், கட்சி தலைமையகத்திலிருந்து ஷாணித் ஸ்மாரக்கிற்கு அணிவகுத்துச் சென்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பிசிசி தலைவர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா, அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் காங்கிரஸ் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது, ஆனால் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறோம். (நரேந்திர) மோடி அரசாங்கம் பணவீக்கம், வெளியுறவுக் கொள்கை போன்றவற்றில் தவறான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்ததே இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும் பெட்ரோல் விலை ஏற்றத்தில் மக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர் என்று அவர் கூறினார். பணவீக்கம் உயர்ந்து கொண்டிருக்கிறது, ஆனால் மோடி அரசு கவலைப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
எரிபொருள் உயர்வு மற்றும் எல்பிஜி எரிவாயு விலைகள் திரும்பப் பெறப்படாவிட்டால் மக்கள் பாஜக தலைவர்களின் முகத்தில் மக்கள் கரியை பூசி விடுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சிங் கச்சரியாவாஸ் தெரிவித்தார். “கொரோனா தொற்றுநோயால் நாட்டு மக்கள் கஷ்டங்களை எதிர்கொள்ளும் நேரத்தில், மோடி அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி எரிவாயு விலையை அதிகரிப்பது வெட்கக்கேடானது” என்று அவர் தெரிவித்தார்.
போராட்ட அணிவகுப்பு மற்றும் தர்ணாவில் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னணி தலைவர்கள் மற்றும் முன்னணி அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.