சண்டிகர்: 90 தொகுதிகளைக்கொண்ட ஹரியானா சட்டமன்ற தேர்தலில்  89 தொகுதியில் காங். போட்டியிடுகிறது. அங்கு கூட்டணி கட்சியான  மார்க்சிஸ்ட் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஹரியானாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றோடு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, வேட்புமனு பரிசீலனை மற்றும் மனு வாபஸ் பெறுவதைத்தொடர்ந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்டு கட்சி உள்பட இண்டி  கூட்டணி  கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதைத்தொடர்ந்து,  கடந்த சில நாட்களாக காங்கிரஸ் தனது வேட்பாளர்கள் பட்டியலை  வெளியிட்டு வந்த நிலையில், நேற்றுமுன்தினம் 40 வேட்பாளர்கள் அடங்கிய 3-வது பட்டியலையும், கடைசி நாளான நேற்று  மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்து,  நேற்று (செப்டம்பர் 12ந்தேதி)  4,5,6-வது பட்டியலைஅடுத்தடுத்து வெளியிட்டது.

இதையடுத்து  மொத்தமுள்ள 90 தொகுதிகளில்  89 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. மீதமுள்ள 1 தொகுதி சிபிஐ(எம்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களாக உள்ள 28 பேருக்கு காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பத்திரிகையாளர் சர்வ மித்ர கம்போஜ்ஜுக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஹரியானாவில் நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்த கூட்டணி சார்பில் முதல்கட்டவேட்பாளர் பட்டியல், செப்டம்பர் 4ந்தி வெளியாது. அதில்  67 பேர் இடம்பெற்றிருந்தனர்.  அதில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, லட்வா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் வினோத் சர்மாவின் மனைவி ராணி சர்மா, கல்கா தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவை உலுக்கிய ஜெசிகா லால் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மனு சர்மாவின் தாயார்தான் இந்த ராணி சர்மா. தோஷம் தொகுதியில் ஸ்ருதி சவுத்ரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் ராஜ்யசபா எம்பியும் ஜூன் மாதம் பாஜகவில் இணைந்தவருமான கிரன் சவுத்ரியில் மகள்தான் ஸ்ருதி சவுத்ரி. இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் தீபக் ஹூடாவையும் பாஜக வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

தொடர்ந்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு மற்ற வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டது. அங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் தீவிரமாக போராடி வருகிறது.  மேலும் ஆம்ஆத்மி கட்சி இண்டி கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது. இதனால் அங்கு மும்முனை மோதல் ஏற்பட்டு உள்ளது.  அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.