டெல்லி
காங்கிரஸ் எம் பி பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரும் கைப்பைகல் மூலமாக பல செய்திகளை அறிவித்து வருகிறார்.
கடந்த திங்கள் கிழமை அன்று வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, நாடாளுமன்றத்திற்கு வந்தபோது, போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ‘பாலஸ்தீனம்’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட கைப்பையை கொண்டு வந்தார்.
பிரியங்கா காந்தி கொண்டு வந்த அந்தப் பையில் தர்பூசணி உள்ளிட்ட பாலஸ்தீன சின்னங்களும், அமைதியை குறிக்கும் வெள்ளைப் புறாவின் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
செவ்வாக்கிழமை நாடாளுமன்றத்திற்கு வரும்போது பிரியங்கா காந்தி கொண்டு வந்த கைப்பையில், வங்காளதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், “வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக துணை நிற்போம்” என்று எழுதப்பட்டிருந்தது.
வயநாடு எம் பி பிரியங்கா காந்தியின் செயலுக்கு ஒருபுறம் ஆதரவு கிடைத்தாலும், மற்றொரு தரப்பினர் இதனை விமர்சித்தும் வருகின்றனர். அதன்படி பா.ஜ.க. எம்.பி. அபராஜிதா சாரங்கி, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரியங்கா காந்திக்கு ஒரு கைப்பையை பரிசளித்தார்.
1984-ம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை நினைவுப்படுத்தும் வகையில் ‘1984 கலவரம்’ என்று எழுதப்பட்டிருந்த அந்த பையை பிரியங்கா காந்தி பெற்றுக்கொண்டார்.
அபராஜிதா சாரங்கி இது குறித்து,
“பிரியங்கா காந்தி தனது கைப்பை மூலம் சில செய்திகளை சொல்கிறார். அந்த வகையில் இதுவும் அவர் சொல்ல வேண்டிய முக்கியமான செய்தியாகும்”
என்று தெரிவித்துள்ளார்.