ஹைதராபாத்:
தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் என். உத்தம் குமார் ரெட்டி துபாக்கா இடைத் தேர்தலில் பெரும் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற தயாராகிவிட்டது என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹைதராபாத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்கள் அதனால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பேசிய உத்தம் குமார் முதலமைச்சர் கே சந்திரசேகர ராவ் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளப்பெருக்கால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர், ஆனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தை கூட முதல்வர் நேரில் சென்று பார்க்கவில்லை. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தலா 10,000 ரூபாய் நிதி உதவி என்று அறிவித்துள்ளார்.

பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி என்பது மிகவும் குறைவானது, அது மக்களின் இழப்புக்கு எவ்விதத்திலும் ஈடு செய்யாது, மேலும் முற்றிலுமாக இடிந்து விழுந்த வீட்டிற்கு 1,00,000 என்றும் சேதமடைந்த வீட்டிற்கு 50,000 ரூபாய் நிதி உதவி என்றும் அவர் அறிவித்தது மக்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கி இருக்கும்.

வெள்ளப்பெருக்கால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை இந்த நிதி உதவி ஈடு செய்யாது என்பது முதலமைச்சருக்கு ஏன் புரியவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார் உத்தம் குமார். தேர்தல் நடப்பதற்கு முன் மக்களிடம் பல வாக்குறுதிகளை அளிக்கிறார்கள், ஆனால் தேர்தல் நடந்து முடிந்த பின்பு அனைத்தையும் மறந்து விடுகிறார்கள்.

மேலும் முதலமைச்சர் சந்திரசேகரராவ் விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது விவசாய மசோதாவை ஆதரிப்பது போன்று உள்ளது, இது விவசாயிகளுக்கு எதிரானது என்று அவர் அறியவில்லை போலும் என்று தெரிவித்தார் உத்தம் குமார், இதுதொடர்பாக ஹைதிராபாத், மெஹபூப் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்த போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.