டெல்லி
பாஜக மாத சம்பளக்காரர்களிடம் பதற்றம் உண்டாக்க முயல்வதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
அகில இந்தியத் தொழில்நுட்பக் காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஒரு புகார் மனு அனுப்பி வைத்துள்ளார்.
அந்த புகாரில்,
’ஐதராபாத்தில் கடந்த 6-ந் தேதி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது, சமூகத்தில் சமமான வளர்ச்சியை உறுதி செய்யப் பொருளாதார, சமூக நீதிக்குக் காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டிருப்பதாக ராகுல்காந்தி பேசினார். அந்தப் பேச்சை வேண்டும் என்றே திசைதிருப்பி பிரசாரம் செய்யப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாட்டின் சொத்துகளைப் பகிர்ந்து அளித்து விடும் என்று பாஜக பொய்ச்செய்தி பரப்பி வருகிறது.
ஒருவர் மாதச் சம்பளதாரர்களுக்கு ‘வாட்ஸ்அப்’ மூலம் வதந்தி பரப்பி உள்ளார். அந்தச் செய்தியில், ”பொதுமக்களின் மூன்றில் இரண்டு பங்கு சொத்துகளைப் பறிமுதல் செய்து, ஜவகர்லால் நேரு தேசியச் சொத்து மறு பங்கீட்டுத் திட்டத்தின்கீழ் ஏழைகளுக்குப் பகிர்ந்து அளிப்பதாகத் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
ஒரு முன்னணி நாளிதழில் இந்த பொய்ச்செய்தி அடிப்படையில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட வதந்தி, பொய். மாதச் சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இடைய குழப்பம், பதற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தி, அவர்களைக் காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்கச் செய்ய முயற்சி நடக்கிறது.
எனவே பாஜக மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து, இத்தகைய வதந்தி பரப்பப்படுவதை நிறுத்த வேண்டும். இது குறித்து, டெல்லி காவல்துறையினரிடமும் புகார் அளிக்க உள்ளோம்.”
என்று கூறியுள்ளார்.