பிவண்டி, மகாராஷ்டிரா
இஸ்லாமிய மாணவி ஒருவருக்கு பர்தா அணிந்து வகுப்புக்கு வர தடை விதித்துள்ளதை எதிர்த்து மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிவண்டி நகரில் சாய் ஓமியோபதி மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் இஸ்லாமிய மாணவியான ஃபகேகா பதாமி கடந்த 2016 ஆம் முதல் வருட பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். பதாமி இஸ்லாமிய வழக்கப்படி பர்தா அணிந்து வகுப்புக்கு வந்துள்ளார். இதற்கு கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து அவரை வகுப்புக்களுக்கு அனுமதிக்கவில்லை.
இது குறித்து அவர் மகாராஷ்டிரா சுகாதாரக் கல்வித் துறையிடம் முறை இட்டுள்ளார். இதற்கு அரசுக் கல்வித் துறை அது சட்ட விரோதமானது என கல்லூரிக்கு தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு கல்லூரி நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை. அதற்குள் முதலாம் ஆண்டு தேர்வுகள் முடிந்து விட்டன.
அதனால் பதாமி உயர்நீதிமன்றத்தை நாடி தனக்கு சிறப்பு வகுப்புக்கள் நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் மற்றொரு கல்லூரியில் படிக்கும் அவரது சகோதரி இதே போல பர்தா அணிந்து வகுப்புக்கு சென்று வருவதையும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார். அதை ஒட்டி அவர் பர்தா அணிந்து வகுப்புக்கு செல்ல அனுமதிப்பதாகவும் ஆனால் சிறப்பு வகுப்புக்கள் நடத்த முடியாது எனவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.
அதன் பிறகு உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் அவர் பர்தாவுடன் வகுப்புக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் அவர் தேர்வு எழுத முடியாது என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. அவர் பலநாட்கள் கல்லூரி வகுப்புக்கு வராததால் இந்த தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதை ஒட்டி அவர் மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளார்.
இந்த பருவம் தொடங்கிய டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதலே அவர் கல்லூரிக்கு சென்றதாகவும் ஆனால் கல்லூரி நிர்வாகம் அவரை பர்தா அணிந்திருந்ததால் வகுப்புக்குள் அனுமதிக்கவில்லை எனவும் பதாமி தெரிவித்துள்ளர். மதச் சார்பற்ற இந்தியாவில் தனது மத வழக்கத்தை பின்பற்றுவது தவறில்லை எனவும் தனது மனுவில் அவர் கூறி உள்ளார்.
இதை விசாரித்த நீதிமன்றம், “மாணவி இஸ்லாமியர் என்பதால் அவரது மத வழக்கப்படி பர்தா அணிந்து வகுப்புக்கு வந்துள்ளார். எனவே அதை ஆட்சேபித்தது கல்லூரி நிர்வாகத்தின் குற்றமாகும். மேலும் அவர் உயர்நீதிமன்றம் அனுமதித்த பிறகே வகுப்புக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் கல்லூரிக்கு வருகை தரவில்லை என்பது தவறாகும். இது குறித்து உடனடியாக கல்லூரி நிர்வாகம் வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.