கோவை: கோயமுத்தூர்  சரக டி.ஐ.ஜி. விஜயகுமார்  நேற்று காலை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரது மரணம் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்ட முதல்தகவல் அறிக்கை எனப்படும்  எப்.ஐ.ஆர். வெளியிடப்பட்டு உள்ளது.

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார்  நேற்று காலை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கோவை உள்பட 4 மாவட்டங்களை கண்காணித்து, சட்டம் ஒழுங்கை பேணி வந்தார். அவரது திடீர் தற்கொலை சர்ச்சையாகி உள்ளது. விஐயகுமாரின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விஜயகுமாரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் விஜயகுமாருக்கு மரணத்திற்கு விசாரணை தேவை என்று தெரிவித்துள்ளார். எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில் தற்கொலை செய்துகொண்ட டிஐஜி விஜயகுமார் உடல் நேற்று மாலையே  தகனம் செய்யப்பட்டது.  21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.  முன்னதாக, விஜயகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஏடிஜிபி அருண், டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்குக் காரணம் மன அழுத்த பிரச்சினைதான். கடந்த சில ஆண்டுகாலமாகவே அவர் மன அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக விஐயகுமார் சிகிச்சையையும் பெற்று வந்தார். மன அழுத்தம் வேறு மன உளைச்சல் வேறு என்று கூறிய ஏடிஜிபி, குடும்பத்திலோ, பணியிலோ அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அருமையான குடும்பம். பணியில் திறம்பட செயல்பட்டார். காவல்துறையினருக்கு முன் உதாரணமாக திகழ்ந்தவர் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், அவரது தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை தொடர்பாக, அவரது பாதுகாவலரான ரவிச்சந்திரன், கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகார் தொடர்பாக போலீசார் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அந்த தகவல் அறிக்கையில் இருப்பது என்னபது குறித்த தகவல்  வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

எனது பெயர் ரவிச்சந்திரன். நான் கடந்த 2011-ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தேன். ஈரோடு மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறேன்.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் நான் கோவை சரக டி.ஐ.ஜி.க்கு தனி பாதுகாப்பு காவலராக இருந்து வருகிறேன். இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக எனக்கு கோவை மாவட்ட ஆயுதப்படையில் இருந்து, 183 என்ற 9 எம்.எம் ரக கைத்துப்பாக்கி வழங்கப்பட்டது. எனக்கு டி.ஐ.ஜி. முகாம் அலுவலகத்தில் ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நான் தங்கி இருந்து பணியாற்றி வருகிறேன்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் டி.ஐ.ஜி விஜயகுமார் இங்கு வந்தார். அவர் வந்த நாளில் இருந்தே தனக்கு தூக்கம் வரவில்லை. அதனால் மாத்திரை எடுத்து கொள்கிறேன் என்று தெரிவிப்பார். தினமும் தூக்கத்திற்காக மாத்திரை எடுத்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

கடந்த 6-ந் தேதி நான் முகாம் அலுவலகத்தில் இருந்தேன். அப்போது டி.ஐ.ஜி. குடும்பத்துடன் வெளியில் சென்றார். பாதுகாப்புக்காக நாங்களும் சென்றோம். பின்னர் இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டோம். இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. வீட்டிற்குள் சென்று ஓய்வெடுத்தார்.

வழக்கமாக டி.ஐ.ஜி விஜயகுமார் தினமும் காலை 7 மணிக்கு அலுவலகத்தில் உள்ள டி.எஸ்.ஆர் அறைக்கு வந்து டி.எஸ்.ஆரை (தினமும் பதிவாகும் வழக்கு விவரங்கள்) பார்ப்பது வழக்கம். ஆனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக காலை 6.30 மணிக்கெல்லாம் டி.எஸ்.ஆர். அலுவலகத்திற்கு வந்து விட்டார். அப்போது முகாம் அலுவலகத்தில் இருந்த ரவிவர்மா என்பவரிடம் பால் கேட்டார். அவரும் பால் காய்ச்சி கொடுக்கவே அதனை அவர் குடித்தார்.

இதைபார்த்த நான் டி.எஸ்.ஆரை எடுத்து கொண்டு அவரிடம் செல்ல முயன்றேன். ஆனால் அதற்குள்ளாகவே சரியாக 6.40 மணிக்கெல்லாம் அவரே டி.எஸ்.ஆர் கேட்டு நான் தங்கியிருக்கும் அறைக்கு வந்து விட்டார். அங்கு வந்தவர் ரவிச்சந்திரன் டி.எஸ்.ஆர் எங்கே கொடுங்கள், பார்ப்போம் என கேட்டார். நானும் அதனை கொடுக்க, அதனை வாங்கி பார்த்தார்.

பின்னர் நான் பயன்படுத்தும் துப்பாக்கி வைத்திருந்த இடத்துக்கு டி.ஐ.ஜி. சென்றார். அங்கு சென்றவர் அந்த துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு சிறிது நேரம் அதனை பார்த்தார். அதனை பார்த்து விட்டு இந்த துப்பாக்கியை எப்படி பயன்படுத்த வேண்டும் என என்னிடம் கேட்டார். நான் சொல்லி கொண்டு இருந்த போதே துப்பாக்கியுடன் அவர் வெளியில் சென்று விட்டார்.

உடனே நான் டி-சர்ட் அணிந்து கொண்டு வெளியில் வர முயன்றேன். அதற்குள் வெளியே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. நானும், என்னுடன் இருந்த டிரைவர் அன்பழகனும் ஓடி வந்து பார்த்தோம். அப்போது டி.ஐ.ஜி. மல்லாந்த நிலையில் தலையில் ரத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார். என்னிடம் இருந்து எடுத்து சென்ற துப்பாக்கி அவரின் அருகிலேயே கிடந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான நாங்கள் இதனை அவரது மனைவியிடம் தெரிவிக்க சத்தம் போட்டு கொண்டே ஓடினோம்.

எங்களது சத்தம் கேட்டு, அவரும் ஓடி வந்து என்ன என்று கேட்டார். நாங்கள் நடந்தவற்றை தெரிவிக்க உடனடியாக அனைவரும் சேர்ந்து, முகாம் அலுவலகத்தில் இருந்து  காலை 7 மணியளவில் ஒரு காரில் உயிருக்கு போராடிய டி.ஐ.ஜியை தூக்கிக்கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றோம்.

அவரை காரில் அழைத்து, செல்லும் வழியிலேயே இதுபற்றிய தகவலை உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டேன்.

ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, டி.ஐ.ஜி. இறந்து விட்டதாக தெரிவித்தார். இதை கேட்டதும் எங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அவர் சுட்டு கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.