சென்னை: முதல்வர் ஸ்டாலின் ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் ஆலையை வரும் 9ந்தேதி திறந்து வைக்கிறார்.

டாடா  நிறுவனத்தின் ஜாகுவார் – லேண்ட்ரோவர் கார் உற்பத்தி தொழிற்சாலைக்கான  கடந்த 2025 செப்டம்பர் 28-ம் தேதி  ராணிப்பேட்டை அருகே உள்ள பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தில்  முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய நிலையில், இந்த ஆலை, வரும் 9ந்தேதி திறந்து வைக்கப்படுகிறது.

 தமிழகத்தின் முக்கிய தொழில்துறை மையங்களுள் ஒன்றாக ராணிப்பேட்டை மாவட்டம்,  திகழ்கிறது. கடந்த 1974-ம் ஆண்டு சுமார் 1089.82 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை, இன்று பகுதி 1, 2, 3 மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என விரிவடைந்து மாநிலத்தின் மிகப் பெரிய தொழிற்பேட்டையாக உருவெடுத்துள்ளது.

இங்கு தோல் பதப்படுத்துதல், தோல் பொருட்கள் தயாரித்தல், மருந்து உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் சுற்றுப்புற மக்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும்,  புற்றுநோய் உள்பட பலவகையான நோய்கள் தாக்கம் அதிகரித்து வருகின்றன. இதனால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் மாசு இல்லாத தொழில்கள் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டுமென மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.,

அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசு புதிய தொழில்துறை திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த வரிசையில், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கத்தில் 1,231 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் 470 ஏக்கர் பரப்பளவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.9,000 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலையை அமைத்துள்ளது. இங்கு ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாக 5,000 பேருக்கும், மறைமுகமாக 15,000 பேருக்கும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு அறிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2025 செப்டம்பர் 28-ம் தேதி பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 9-ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் வருகிறார். அப்போது புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ஏற்கனவே அடிக்கல் நாட்டிய தொழிற்சாலைகளை திறந்து வைக்கவும் உள்ளார். அப்போது டாடா மோட்டார்ஸ் ஆலையை முதமைச்சர் திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேலூர் சரக டிஐஜி தர்மராஜ் தலைமையில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் 1,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

[youtube-feed feed=1]