சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில்காலநிலை மாற்றத்திற்கான நிர்வாகக் குழு கூட்டம் கூடியது. இதில் சுற்றுச்சூழல் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக ஆலோசனை வழங்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இந்த குழு அவ்வப்போது கூடி, கால நிலைகள் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனை நடத்தும். ஏற்கனவே இரு முறை இந்த குழு கூட்டம் கூடிய நிலையில், இன்று 3வது கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், காலநிலை மாற்றத்திற்கான நிர்வாகக் குழுவின் (Tamil Nadu Governing Council on Climate Change) மூன்றாவது கூட்டம்  இன்று  (டிசம்பர் 17, 2025) சென்னையில்  நடைபெற்று வருகிறது.  இந்தக் கூட்டத்தில் மாநிலத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைத் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான எதிர்கால உத்திகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஏற்கனவே கடந்த நவம்பர் 5ந்தேதி நடைபெற்ற  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம், பசுமை தமிழ்நாடு இயக்கம், வன விலங்குகளுக்கான அவசர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தேவைகளுக்கென மூன்று உயர் வனவிலங்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் அமைப்பது குறித்தும், சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா அமைப்பது குறித்தும், மரக்காணத்தில் பன்னாட்டுப் பறவைகள் மையம், தஞ்சாவூர் மாவட்டம், மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையம், திண்டுக்கல் வனக்கோட்டம், அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம், பழவேற்காடு ஏரிப் பகுதியில் சூழலியல் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்துவது போன்ற பல்வேறு அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து பல்வேறு பணிகளை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று  3வது குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த  கூட்டத்தில்,  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு,  உள்பட்  உயர் அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

[youtube-feed feed=1]