சீனா தாக்குதல், எல்லைப் பிரச்சினை குறித்து ஆலோசிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமை யில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர், திமுக சார்பில் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக சார்பில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்பட நாடு முழுவதும் இருந்து பெரும்பாலான கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் லடாக்கின் எல்லைப்பகுதியான கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ந்தேதி அன்று இந்தியா, சீனா வீரர்களுக்கு இடையே தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் சீன வீரர்கள், இரும்பு கம்பிகள், கற்கள் மூலம் இந்திய ராணுவத்தினரை தாக்கினர். இதில் தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்த கொடுமையான சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், ‘சீனாவின் தாக்குதல் என்பது தேசப்பாதுகாப்பு குறித்த விஷயம். நமது நிலத்தை யாரும் அபகரிக்க விட மாட்டோம். நாட்டிற்காக உயிரிழந்த வீரர்களை எண்ணி பெருமை அடைகிறோம். அவர்களின் தியாகம் வீண் போகாது. இந்த தாக்குதலை சீனா திட்டமிட்டே நடத்தியள்ளது. இதற்கு இந்திய படைகள் தக்க பதிலடி கொடுக்கும்’ என்று தெரிவித்தார்.
சீனத்தாக்குதல் விவகாரம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று மாலை காணொளி காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது.
கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, திமுக சார்பில் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக சார்பில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்பட நாடு முழுவதும் இருந்து பெரும்பாலான கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஆம் ஆத்மி மற்றும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் பங்கேற்கவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.