சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலைகளை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சென்னையில் தொடங்கி வைத்தார்.
சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில். பெண்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். அதன்படி, பயனர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்காக ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பணம் கிடைக்கும் என எதிர்பாத்துக்கொண்டி ருந்த மக்களுக்கு பணம் வழங்கப்படாதது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளாலும், அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியதாலும், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரொக்கம் வழங்கவில்லை என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, பொங்கல் பரிசு வழங்குவதற்கான, டோக்கன் மாநிலம் முழுவதும், அனைத்து மண்டல இணை பதிவாளர்கள் தலைமையில் ரேஷன் கடைகள் மூலம் பரிசு தொகுப்பு விநியோகம் செய்வதற்காக டோக்கன்களை கடந்த 3 ஆம் தேதி முதல் ஊழியர்கள் வீடுவீடாக சென்று விநியோகம் செய்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து இன்றுமுதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ரேசன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு வழங்கப்படுகிறது. அத்துடன் இலவச வேட்டி, சேலையும் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படுகிறது.
இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகிறார்கள்.