சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின், தனது தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில், முதல்வர் படைப்பகத்தை திறந்து வைத்தார். கொளத்தூரில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ், படிப்பதற்கான நூலகம் உள்ளிட்டவை இடம்பெற்ற முதல்வர் படைப்பகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை கொளத்தூரில் உள்ள ஜெகன்நாதன் தெருவில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பெயரில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் கட்டப்பட்டுள்ளது. இது மூன்று தளங்களை கொண்டது. மூன்று தளங்களுக்கும் ஒவ்வொரு பணிகளுக்காக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த முதல்வர் படைப்பகத்தில் படிக்க ஒரு தளம், பணியாற்ற ஒரு தளம், உணவு சாப்பிட ஒரு தளம் என 3 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படைப்பகத்தில் ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கின்ற அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மாணவ மாணவிகள் படிப்பிற்குத் தேவையான புத்தகங்களை கொண்ட ஒரு நூலகமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. பணி செய்வதற்காக கோ- ஒர்க்கிங் ஸ்டேஷன் எனப்படும் ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 38 நபர்கள் ஒரே நேரத்தில் பணியாற்றலாம்.
இந்த முதல்வர் படைப்பகத்தை இலவசமாக அனுமதிக்கப்பட்டால் பொழுதுபோக்கு கூடமாக மாறிவிடக்கூடும் என்பதற்காக இந்த குறைந்தபட்ச கட்டணம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதற்கு ரூ.5 மற்றும் ரூ.10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த முதல்வர் படைப்பகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.4) திறந்து வைத்தார்.
இதனையடுத்து, பெண்கள் கணினி கற்பதற்காக கொளத்தூரில் அமைக்கப்பட்டுள்ள அனிதா அகாடமியில் 13-வது பேட்ச்சாக பயிற்சி முடித்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கணினியை வழங்குகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 105 பேருக்கு கணினியும், 360 பேருக்கு தையல் இயந்திரமும் வழங்குகிறார்.
இந்த அகாடமியின் மூலம் 2,000-க்கும் மேற்பட்டோர் பலனடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.