சென்னை

சென்னை (ஐசிஎஃப்) இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் அதிக அளவில் புது வகை ஏ சி 3 டயர் பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஐசிஎஃப் பல சோதனைகள் நடத்தி புதிய வகை ஏ சி 3 அடுக்கு படுக்கை வசதி கொண்ட பேட்டிகளை வடிவமைத்தது.    இந்த வடிவமைப்புக்களுக்கு பல கடினமான சோதனைகளுக்குப் பிறகு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.   இந்த வடிவமைப்பின் அடிப்படையில் கடந்த ஆண்டு கப்ர்தலாவில் உள்ள தொழிற்சாலையில் ஒரு ஏசி மூன்றடுக்கு படுக்கை ரயில் பெட்டி உருவாக்கப்பட்டது.   இந்த பெட்டி அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற்றது.

அதன் அடிப்படையில் இந்த பெட்டிகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி இத்தகைய பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலை இந்த ஆண்டு 344 கோச்சுகளை உருவாக்கும், அதே நேரத்தில் கபூர்தலா ரயில் கோச் தொழிற்சாலை 250 கோச்சுகளை உற்பத்தி செய்யும் பணியில் உள்ளது.  தற்போதைய நிலையில் இந்த பெட்டிகள் கட்டணக் குறைவுடன் இயக்கப்படுவதால் இதற்கு அதிக அளவில் தேவை உள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய பெட்டிகளில் 72 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும்.   ஆனால் இந்த புதிய வகை பெட்டியில் 83 பேர் பயணம் செய்யலாம்.  இந்த பெட்டிகளில் மின்சார சுவிட்ச் கியர்கள் கீழ்த் தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால் இட வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கொண்டு 11 படுக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.   மேலும் அனைத்து இருக்கைகளில் நீர் பாட்டில் வைக்க மற்றும் மொபைல்கள் சார்ஜ் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.