சென்னை: தமிழ்நாட்டில், கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்களுக்கு பொருத்த மைக்ரோ சிப் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நாடு முழுவதும் உள்ள தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, அந்த நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, தமிழகத்திலும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, அவற்றுக்கு மைக்ரோ சிப் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழ்நாடு கால்நடைகள் அபிவிருத்தி முகமை மூலமாக 2 லட்சத்து 40 ஆயிரம் மைக்ரோ சிப்களை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த செப்டம்பரில் முதல் டெண்டர் விடப்பட்டு அதில் எக்ஸ்ஹீலர் இன்னோவேடிவ் சொல்யூஷன்ஸ் என்ற தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு, அந்த டெண்டரை திடீரென ரத்து செய்து விட்டு கடந்த நவ.26-ம் தேதி மறு டெண்டர் நடத்தி மற்றொரு தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாக அறிவி்க்கப்பட்டது.
இதை எதிர்த்து எக்ஸ்ஹீலர் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், “தமிழகம் முழுவதும் கருத்தடை செய்யப்பட்ட தெருநாய்களுக்கு மைக்ரோ சிப்களை விநியோகம் செய்யும் டெண்டரில் தங்களது நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதை திடீரென ரத்து செய்துவிட்டு, ஏற்கெனவே தகுதியிழப்பு செய்யப்பட்ட மற்றொரு நிறுவனத்துக்கு மைக்ரோ சிப்களை விநியோகம் செய்வதற்கான டெண்டரை வழங்கியிருப்பது சட்டவிரோதமானது. எனவே, அந்த டெண்டர் நடைமுறைகளுக்கு தடை விதித்து அதை ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், தெருநாய்களுக்கான மைக்ரோ சிப்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரில் பல்வேறு குளறுபடிகள், விதிமீறல்கள் நடந்துள்ளது எனக் கூறி அந்த டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும், இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.18-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
[youtube-feed feed=1]