சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் நில அபகரிப்பு வாக்கில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு கோவை மாவட்டம் விளாங்குறிச்சி கிராமத்தில் கோவிந்தசாமி என்பவருக்குச் சொந்தமான 45 ஏக்கர் 82 சென்ட் நிலத்தை நில சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் உபரி நிலங்களாக அறிவித்து கையகப்படுத்தியதை எதிர்த்து கோவிந்தசாமியின் மனைவி தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கோவிந்தசாமியின் மனைவி இந்த நிலத்துக்குப் பட்டா வழங்க வேண்டும் என்று அளித்த மனுவின் அடிப்படையில், பட்டா வழங்க வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்து அதை வருவாய்க் கோட்டாட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டார். அவரது வாரிசுகள் இதை எதிர்த்து, தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து நிலத்தை மீட்க உயர்நீதிமன்றம், உத்தரவிட்டது.

இன்று இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர், அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிலம் மீட்கப்பட்டு நேரில் சென்று ஆய்வு செய்தபோது, அங்கு சிங்காநல்லூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர். கே.ஆர்.ஜெயராம் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் பல கட்டுமானங்களை ஏற்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி,

“அரசு நிலத்தில் சட்டவிரோதமாகக் குடியிருந்தவர்கள், அந்த நிலத்தை மற்றவர்களின் பெயருக்கு மாற்றி உள்ளனர். இது அழுத்தத்தின் காரணமாக நடைபெற்றதா அல்லது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டார்களா என விரிவாக விசாரிக்கப்பட வேண்டும்.

அரசு நிலத்தை பொது ஊழியர் என்ற பெயரில் அபகரிப்பதை அனுமதிக்க முடியாது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டும். நிலத்தையும், கட்டிடத்தையும் மீட்டு, பொதுப் பயன்பாட்டுக்குத் தமிழக அரசு பயன்படுத்த வேண்டும்” 

என்று உத்தரவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]