கான்பூர்: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது சுதந்திரம் என கோஷமிட்டால் தேச துரோக வழக்கு பாயும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கூட்டத்தில் பேசிய போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் மேலும் பேசியதாவது: எதிர்ப்பு என்ற பெயரில், காஷ்மீரைப் போல அசாதி என்ற முழக்கங்களை யாரேனும் எழுப்பினால், அது தேசத்துரோகச் செயலாகக் கருதப்படும்/
அரசாங்கம் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நான் கூற விரும்புகிறேன்.இந்த மக்களுக்கு சொந்தமாக போராட்டங்களில் பங்கேற்க தைரியம் இல்லை.
அவர்கள் காழ்ப்புணர்ச்சியில் ஈடுபட்டால், சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே, அவர்கள் தங்கள் வீட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளை சாலைகளில் அமர வைக்க தொடங்கியுள்ளனர்.
நாங்கள் தோற்றுவிட்டோம், எனவே நீங்கள் சாலைகளில் உட்கார்ந்து போராடுங்களள் என்று பெண்களை, குழந்தைகளை தூண்டுவிடுகின்றனர்.
காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் இடதுசாரிகள் நாட்டை பணயம் வைத்து அரசியல் செய்வதற்கும், சிஏஏ பற்றி கூட தெரியாத பெண்களை போராடும்படி தூண்டுவது எவ்வளவு வெட்கக்கேடானது.
அவர்களைப் பொறுத்தவரை நாடு முக்கியமல்ல. இந்துக்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், சமணர்கள் மற்றும் பார்சிகள் முக்கியமல்ல. இப்போது, காங்கிரஸைப் பொறுத்தவரை, கிறிஸ்தவர்கள் கூட முக்கியமல்ல. ஐ.எஸ்.ஐ முகவர்கள் இந்தியாவுக்குள் நுழையும் வரை சிஏஏக்கு எதிராக போராட்டங்கள் தொடரும் என்று அவர்கள் கூறியுள்ளனர் என்றார்.