டெல்லி: சந்திரயான்-3 விண்கலம் அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படும் என மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பெகாசஸ் அமளிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக சபை அடிக்கடி ஒத்தி வைக்கப்பட்டு வரும் நிலையில், சபை நடவடிக்கைகளும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலப் பணிகள் குறித்து மக்களவை உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் பதிலளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது,
“கொரோனா காரணமாக சந்திரயான்-3 பணிகளில் சிறு தொய்வு ஏற்பட்டது. அதனால் விஞஞானிகள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார்கள். அவர்களால் வீட்டிலிருந்து செய்ய முடிந்த பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சந்திரயான்-3 பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும், கணினி செயல்திறன், விண்கல விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால், இந்த ஆண்டு விண்ணில் ஏவுவதற்கான சாத்தியம் இல்லை. தொடர்ந்து பணி மேற்கொள்ளப்பட்டால், 2021ஆம் ஆண்டு இரண்டாம் பாதியில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்த வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.